மாணவர்களை தாக்கியவர்களை கைது செய்ய கோரி, கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
பள்ளி மணவர்களை தாக்கியவர்களை கைது செய்ய கோரி, கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அருகே உள்ள சோமண்டார் குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றிலும் உள்ள கிராமப்புற மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில், ரெங்கநாதபுரம் மற்றும் அகரகோட்டாலம் கிராமத்தை சேர்ந்த மாணவர்களுக்கிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம், மதியம் பள்ளியில் வைத்து மீண்டும் தகராறு ஏற்பட்டது.
மேலும் பள்ளி முடிந்து அரசு பஸ்சில் வீடு திரும்பிய ரெங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் சிலரை, ரோடு மாமந்தூர் கைக்காட்டி அருகே வைத்து அகர கோட்டலாம் பகுதி மாணவர்கள் தங்களது நண்பர்கள் சிலருடன் 3 மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தனபால் தலைமையில் ரெங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீரமுத்து மற்றும் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று கள்ளக்குறிச்சிக்கு வந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், கலெக்டர் கிரண்குராலாவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
அதில், எங்கள் கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் 3 பேர் பள்ளி முடிந்து அரசு பஸ்சில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது, ரெங்கநாதபுரம் ரோடு மாமந்தூர் என்கிற இடத்தில் வந்த போது, ரெங்கநாதபுரத்தை சேர்ந்த சிலர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அப்போது அவர்கள், அரசு பஸ்சை வழிமறித்து எங்கள் கிராமத்தை சேர்ந்த 3 மாணவர்களை தாக்கினர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அனைவரையும் கைது செய்ய வேண்டும். மேலும் எங்கள் மீது இதுபோன்று அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வரும் ஒரு பிரிவினர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்று அதில் தெரிவித்து இருந்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் கிரண்குராலா நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனிடமும் மனு கொடுத்தனர். இதற்கிடையே மாணவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, ரோடுமாமந்தூரை சேர்ந்த கார்த்திக்(29), பள்ளி மாணவர் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 2 மாணவர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story