பேக்கரி கடைக்காரர் கொலை - பாகூர் அருகே பரபரப்பு
பாகூர் அருகே ரூ.2 லட்சத்துடன் மாயமானதாக கருதப்பட்ட பேக்கரி கடைக்காரர் கொலை செய்யப்பட்டார்.
பாகூர்,
புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் வஜ்ரவேல் (வயது 51). இவருக்கு வள்ளியம்மாள் (48) என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். ஏம்பலத்தில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தின் நிர்வாகியாகவும் வஜ்ரவேல் இருந்து வந்தார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அதிலிருந்து வெளியேறிய அவர், வில்லியனூர் பைபாஸ் சாலை மற்றும் ஏம்பலம் பகுதியில் பேக்கரி கடை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கடையில் இருந்து வஜ்ரவேல், செம்பியம்பாளையத்தில் உள்ள தனது பெரியம்மா வசந்தாவை பார்க்க சென்றார். அவர் 2 லட்ச ரூபாய் தருவதாகவும், அதை வாங்க செல்வதாகவும் அவரது மனைவியிடம் வஜ்ரவேல் கூறிவிட்டு காரில் புறப்பட்டுச் சென்றார்.
செம்பியம்பாளையத்தில் உள்ள பெரியம்மா வசந்தாவிடம் வஜ்ரவேல் ரூ.2 லட்சத்தை வாங்கிக்கொண்டு, நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு செல்லவில்லை. அவரது குடும்பத்தினர், வஜ்ரவேலை செல்போனில் தொடர்பு கொண்டபோது, முடியவில்லை. இதனால், வஜ்ரவேல் கடத்தப்பட்டு இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் கருதினர். இதுகுறித்து அவர்கள் கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
ஆனால், அவரது புகாரை போலீசார் ஏற்காமல், மங்கலம் காவல் நிலையத்தி்ற்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நேற்று அதிகாலை வழக்குப்பதிவு செய்து, வஜ்ரவேல் மாயமானது குறித்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் வஜ்ரவேலின் கார், பாகூரை அடுத்துள்ள குருவிநத்தம் சமுதாய நலக்கூடம் அருகே நிற்பதை கண்டு, அவரது குடும்பத்தினருக்கு போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ், சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு சென்று காரினை சோதனை செய்தனர். அப்போது காரின் பின் பகுதி் இருக்கையில் வஜ்ரவேல், கொலை செய்யப்பட்டு நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. மேலும், காரில் பேக்கரிக்கு தேவையான கேக், பன், பாதாம் பால் உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தன.
வஜ்ரவேல் தன்னுடன் எடுத்து சென்ற ரூ.2 லட்சம் மற்றும் பேக்கரியில் விற்பனையான பணமும் மாயமாகி இருந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தடயங்களை சேகரித்தனர். மேலும் புதுச்சேரியில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. கார் நின்ற இடத்தில் இருந்து மோப்ப நாய் சிறிது தூரம் ஓடியது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
பின்னர் வஜ்ரவேல் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மங்கலம் - செம்பியம்பாளையம் சாலையில் நேற்று முன்தினம் வழிப்பறி கும்பல் ஒன்று அந்த வழியாக சென்ற ஒருவரை பிடிக்க முயன்றுள்ளது. ஆனால், அந்த நபர் தப்பிச் சென்றார். ஒருவேளை அந்த வழிப்பறி கும்பலிடம் பணத்துடன் வந்த வஜ்ரவேல் சிக்கி இருக்க வாய்ப்புள்ளது. அந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வஜ்ரவேல் மாயமான தகவல் கிடைத்த உடனே போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு இருந்தால், உயிரோடு மீட்டிருக்கலாம் என போலீசார் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடத்தப்பட்டிருக்கலாம் என கருதப்பட்ட நிலையில் பேக்கரி கடை உரிமையாளர் கொலை செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மர்ம கும்பல் அவரை கொன்று பணத்தை கொள்ளையடித்து இருக்கலாமா? அல்லது வேறு ஏதும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story