குடகனாற்றில் சுழற்சி முறையில் தண்ணீர் திறப்பு, குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை


குடகனாற்றில் சுழற்சி முறையில் தண்ணீர் திறப்பு, குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 30 Jan 2020 10:15 PM GMT (Updated: 30 Jan 2020 3:54 PM GMT)

குடகனாற்றில் சுழற்சி முறையில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் வேளாண்மை இணை இயக்குனர் பாண்டித்துரை, துணை இயக்குனர் சீனிவாசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ராஜ்குமார் (பொது), ரவிபாரதி (வேளாண்மை) உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நிலக்கோட்டை தாலுகா விளாம்பட்டியை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் நோய் தாக்கிய நெற் பயிருடன் வந்து இழப்பீடு கேட்டார். அப்போது நிலக்கோட்டை தாலுகாவில் நெற் பயிரை லட்சுமிவைரஸ் எனும் நோய் தாக்கியதால், விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், என்று கோரிக்கை வைத்தார். மேலும் பிற விவசாயிகள் விடுத்த கோரிக்கைகள் விவரம் வருமாறு:-

*ஆத்தூர் ராஜவாய்க்கால், குடகனாறு ஆகியவற்றில் தண்ணீர் திறப்பது பற்றிய பேச்சுவார்த்தையின்படி செயல்படாமல், குடகனாற்றில் 2 முறை மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பின்னர் குடகனாற்றில் தண்ணீர் திறக்கவில்லை. எனவே, சுழற்சி முறையில் தண்ணீர் திறக்க வேண்டும். இதுதொடர்பாக கடந்த 2004-ம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கை முடித்து வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

*ஆத்தூர் முதல் வேடசந்தூர் வரை குடகனாற்றில் பல கோடி ரூபாய் அளவுக்கு மணல் அள்ளப்பட்டுள்ளது. இதுபற்றி புகார் கொடுத்தாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் குடகனாறு பாழாகி வருகிறது. எனவே, குடகனாறு முழுவதும் சீரமைத்து, கரைகளை பலப்படுத்த வேண்டும். குடகனாற்றில் தோல் மற்றும் சோப்பு தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும்.

*கீரனூர், அ.கலையம்புத்தூர், கோரிக்கடவு, மானூர், தாமரைக்குளம் ஆகிய பகுதிகளில் 12 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பாசனத்துக்கு பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து 130 நாட்களுக்கு குறையாமல் தண்ணீர் திறக்கவேண்டும்.

*ஒட்டன்சத்திரம் பகுதியில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பரப்பலாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்.

*பருவமழை குறைவாக பெய்துள்ளதால், நீர்நிலைகள் வறண்டு விட்டன. பாசனத்துக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். எனவே, வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து, விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்றுத்தர வேண்டும்.

*குடிமராமத்து திட்டத்தில் குளத்தை தூர்வார ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டியுள்ளது. விவசாயிகள் உணவு தானியத்தை உற்பத்தி செய்பவர்கள் மட்டுமே. தானியத்தை விற்பனை செய்யும் வணிகர் அல்ல. எனவே, குடிமராமத்து திட்ட நிதிக்கான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். மாவட்டம் முழுவதும் அனைத்து நீர்நிலைகளையும் தூர்வாரி பாதுகாக்க வேண்டும்.

மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.

இதற்கு பதில் அளித்து கலெக்டர் பேசுகையில், அணைகளில் இருந்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறப்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நீர்நிலைகளை பாதுகாக்க குடிமராமத்து திட்டத்தில் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்றார்.

கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜ்குமார் பேசுகையில், ஆத்தூர் ராஜவாய்க்கால், குடகனாறு தண்ணீர் பிரச்சினை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைவாக முடிக்க தேவையான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தண்ணீர் பங்கீடு பிரச்சினை யை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மணல் கொள்ளை தொடர்பாக வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூட்டாக நடவடிக்கை எடுப்பார்கள், என்றார்.

Next Story