அதிக வட்டி வாங்கி தருவதாகக்கூறி ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் ரூ.4½ லட்சம் மோசடி - 4 பெண்கள் மீது வழக்குப்பதிவு


அதிக வட்டி வாங்கி தருவதாகக்கூறி ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் ரூ.4½ லட்சம் மோசடி - 4 பெண்கள் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 30 Jan 2020 10:30 PM GMT (Updated: 30 Jan 2020 8:13 PM GMT)

வங்கியில் டெபாசிட் செய்து அதிக வட்டி வாங்கி தருவதாகக்கூறி ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் ரூ.4½ லட்சம் மோசடி செய்த 4 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை சின்னப்பா நகரை சேர்ந்தவர் வேலம்மாள். ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியையான இவர், தனக்கு கிடைத்த ஓய்யூதிய பணத்தை புதுக்கோட்டையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சேமித்து வைத்து இருந்தார். இதை அறிந்த அதேபகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற வருவாய் அலுவலர் நல்லுசாமியின் மகள் ஐஸ்வர்யா, அவரது சகோதரி தேவப்பிரியா, தாயார் அழகுதேவி ஆகியோர் கடந்த 2018-ம் ஆண்டு வேலம்மாளை அணுகி உள்ளனர்.

அப்போது அவர்கள் வேலம்மாளின் மகன் பிறந்தநாளன்று ரூ.100-க்கு கேக்கும், ரூ.350-க்கு வெள்ளி மோதிரத்தையும் வாங்கி கொடுத்தனர். பின்னர் அவர்கள் வேலம்மாளிடம், உங்களின் சேமிப்பு பணத்தை தனியார் வங்கியில் டெபாசிட் செய்தல் அதிக வட்டி வாங்கி தருவதாகவும், அதுமட்டுமின்றி வங்கி கடனும் பெறலாம் எனக்கூறினார்கள். இதை நம்பிய வேலம்மாள் தனியார் வங்கியில் பணம் டெபாசிட் செய்ய முடிவு செய்தார்.

இதையடுத்து ஐஸ்வர்யா, தேவப்பிரியா, அழகுதேவி ஆகியோர் புதுக்கோட்டை கீழ 3-ம் வீதியை சேர்ந்த ஒரு தனியார் வங்கியில் முகவராக பணியாற்றுவதாக கூறப்படும் ராணி என்பவரின் உதவியோடு 3 தவணைகளாக வேலம்மாளிடம் இருந்து ரூ.4½ லட்சத்தை வாங்கி உள்ளனர். பின்னர் அந்த பணத்தை வேலம்மாள் பெயரில் தனியார் வங்கியில் டெபாசிட் செய்ததற்கான ஒரு ரசீதையும் வழங்கி உள்ளனர். இந்நிலையில் வேலம்மாளுக்கு சந்தேகம் வந்து, சம்பந்தப்பட்ட தனியார் வங்கிக்கு சென்று விசாரித்து உள்ளார்.

அப்போது வேலம்மாள் பெயரில் அந்த வங்கியில் பணம் எதுவும் டெபாசிட் செய்யப்படவில்லை என்பதும், ஐஸ்வர்யா உள்ளிட்டோர் வழங்கிய ரசீது போலி என்பதும் தெரியவந்தது. இது குறித்து வேலம்மாள் ஐஸ்வர்யா உள்ளிட்டோரிடம் கேட்டபோது, அவர்கள் முறையான பதில் கூறாமல், வேலம்மாளை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வேலம்மாள் புகார் மனு கொடுத்தார். புகார் மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் இது குறித்து கணே‌‌ஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இதையடுத்து கணே‌‌ஷ்நகர் போலீசார் ஓய்வுபெற்ற ஆசிரியை வேலம்மாளிடம் தனியார் வங்கியில் டெபாசிட் செய்து அதிக வட்டி வாங்கி தருவதாககூறி ரூ.4½ லட்சத்தை மோசடி செய்ததாக ஓய்வு பெற்ற வருவாய் அலுவலர் நல்லுசாமியின் மகள் ஐஸ்வர்யா, அவரது சகோதரி தேவப் பிரியா, தாயார் அழகுதேவி மற்றும் ராணி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அவர்கள் கைது செய்யப்பட்டால், இதுபோல் எத்தனை பேரிடம் ஏமாற்றி உள்ளனர் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story