மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி - வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம்


மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி - வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம்
x
தினத்தந்தி 1 Feb 2020 3:15 AM IST (Updated: 1 Feb 2020 2:30 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில், மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.

பெரம்பலூர், 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான குழு மற்றும் தடகள விளையாட்டு போட்டிகள் பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர். மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. போட்டிக்கு மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் பாபு தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நி‌ஷாபார்த்திபன், பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் கை ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தயமும், கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 50 மீட்டர் ஓட்டப்பந்தயமும், குண்டு எறிதலும், உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 50 மீட்டர் ஓட்டப்பந்தயமும், இரண்டு கால்களும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் சக்கர நாற்காலி பந்தயமும் நடைபெற்றது. முற்றிலும் பார்வையற்றோருக்கு 50 மீட்டர் ஓட்டமும், குண்டு எறிதலும், மிகக்குறைந்த பார்வையற்றோருக்கு 100 மீட்டர் ஓட்டமும், நின்ற நிலையில் தாண்டுதலும், குண்டு எறிதலும் நடத்தப்பட்டது. மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு ஓட்டப்பந்தயம், நின்ற நிலையில் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு 100, 200, 400 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு குழு போட்டிகளான டேபிள் டென்னிஸ், இறகு பந்தாட்டம், கைப்பந்து, எறிபந்து, கபடி உள்ளிட்டவை நடத்தப்பட்டது.

பதக்கங்கள், சான்றிதழ்

இதில் மாற்றுத்திறனாளி பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், ஆண், பெண் மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 360 பேர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாற்றுத்திறனாளிகளுக்கும், குழு போட்டிகளில் வெற்றி பெற்ற அணியின் மாற்றுத்திறனாளிகளுக்கும் போலீஸ் சூப்பிரண்டு நி‌ஷாபார்த்திபன், தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. ஆகியோர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் முதல் 2 இடங்களை பிடித்த மாற்றுத்திறனாளிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் காமாட்சி, பள்ளி உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன், பெரம்பலூர் மாவட்ட மகளிர் விளையாட்டு விடுதி மேலாளர் ஜெயக்குமாரி, தடகள பயிற்றுனர் கோகிலா மற்றும் பள்ளி உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story