124 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற சின்னமுட்டம் மீனவர்கள் கரை திரும்பினர்


124 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற சின்னமுட்டம் மீனவர்கள் கரை திரும்பினர்
x
தினத்தந்தி 31 Jan 2020 10:07 PM GMT (Updated: 31 Jan 2020 10:07 PM GMT)

சின்னமுட்டத்தில் வேலை நிறுத்தம் முடிந்து 124 நாட்களுக்கு பின்பு கடலுக்கு சென்ற மீனவர்கள் நேற்று கரை திரும்பினர். அவர்களது வலையில் ஏராளமான உயர்ரக மீன்கள் சிக்கியிருந்தன.

கன்னியாகுமரி, 

கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த மீனவர்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு ஆழ்கடலுக்கு சென்று விட்டு இரவு 9 மணிக்கு மீண்டும் துறைமுகத்துக்கு திரும்பி விட வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. இதனால் மீனவர்கள் தங்களை ஆழ்கடலில் தங்கி இருந்து மீன்பிடிக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் 124 நாட்கள் நடந்தது. இதனால், கோடிக்கணக்கில் வருவாய் இழப்பும் ஏற்பட்டது.

இதுதொடர்பாக மீனவர்கள் மற்றும் விசைப்படகு உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள், அரசுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் 2 நாட்கள் தங்கியிருந்து மீன்பிடிக்க அரசு அனுமதி அளித்தது.

இதையடுத்து சின்னமுட்டம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை முடித்துவிட்டு கடந்த 29-ந் தேதி கடலுக்கு செல்ல தொடங்கினர். அன்று மொத்தம் 42 விசைப்படகுகள் கடலுக்குள் சென்றன. 2 நாட்கள் தங்கியிருந்து மீன்பிடித்துவிட்டு நேற்று மதியம் முதல் விசைப்படகுகள் ஒவ்வொன்றாக கரை திரும்ப தொடங்கின.

மீனவர்களின் வலையில் சீலா, நெய்மீன், நவரை, வளமீன், பாறை, குழிமீன், கைகொழுவை, நெடுவா, திருக்கை, செம்மீன் போன்ற உயர்ரக மீன்கள் சிக்கியிருந்தன. குறிப்பாக 25 கிலோ எடையுள்ள பாறை மீனும், 10 கிலோ எடையுள்ள சீலா மீனும் இருந்தன. இந்த மீன்களை மீனவர்கள் துறைமுகத்தில் உள்ள ஏலக்கூடத்திற்கு கொண்டு வந்து குவித்தனர். இதனால், நீண்ட நாட்களுக்கு பின் ஏலக்கூடத்தில் மீன்கள் குவியல் குவியலாக காணப்பட்டது.

இவற்றை ஏலம் எடுத்து செல்ல கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தூத்துக்குடி, ராமேசுவரம் போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர். அவர்கள் மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். ஒரு கிலோ பாறை மீன் ரூ.350 வரையும், ஒரு கிலோ சீலா மீன் ரூ.1000 வரையும் ஏலம் போனது. இதையொட்டி, சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் நீண்ட நாட்களுக்கு பின்பு நேற்று பரபரப்பாக காணப்பட்டது. 

Next Story