திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கவேண்டும் கலெக்டருக்கு எம்.எல்.ஏ கோரிக்கை


திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கவேண்டும் கலெக்டருக்கு எம்.எல்.ஏ கோரிக்கை
x
தினத்தந்தி 2 Feb 2020 4:00 AM IST (Updated: 2 Feb 2020 3:09 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூரை அடுத்த அரகண்டநல்லூரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் இயங்கி வருகிறது. இந்த விற்பனைக்கூடத்திற்கு விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து அதிகளவில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை எடுத்து வந்து விற்பனை செய்கின்றனர். குறிப்பாக ரி‌ஷிவந்தியம் தொகுதியில் இருந்து அதிகளவில் விவசாயிகள் இங்கு வந்து தானியங்களை விற்று செல்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலே அதிக கொள்முதல் நடைபெறும் இந்த விற்பனைக்கூடத்திற்கு ஏராளமான வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்து செல்கின்றனர். ஆனால் தானியங்களின் விலையை வியாபாரிகளே நிர்ணயம் செய்வதால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். அதே சமயம் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் இருந்தால் நிர்ணயிக்கப்பட்ட விலை கிடைக்கும். எனவே அரகண்டநல்லூரிலோ அல்லது திருக்கோவிலூர் மற்றும் ரி‌ஷிவந்தியம் தொகுதி ஆகிய 2 தொகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் திருக்கோவிலூர் புறவழிச்சாலை பகுதியிலோ உடனடியாக நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கவேண்டும்.

விவசாயிகள் கவலை

மேலும் விற்பனைக்கூடத்திற்கு வரும் விவசாயிகளிடத்தில் ஒரு மூட்டை எடைபோட ரூ.20 முதல் ரூ.25 வரை பணம் வசூலிக்கின்றனர். விற்பனை நடைபெற்ற அன்றே விவசாயிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்ற அரசின் விதிமுறையை அமல்படுத்திடாமல், வியாபாரிகளுக்கு ஆதரவாக விற்பனைக்கூடம் செயல்பட்டு, விவசாயிகளிடத்தில் கடனுக்கு கொள்முதல் செய்ய துணைபோகிறது. இதனால் விவசாயிகள் பெரும் கவலைக்குள்ளாகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் நேரில் வந்து விற்பனைக்கூடத்தில் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Next Story