சாலை விரிவாக்க பணிக்கான கருத்து கேட்பு கூட்டம் திடீர் ரத்து: ஒன்றிய அலுவலகத்தை 6 கிராம மக்கள் முற்றுகை


சாலை விரிவாக்க பணிக்கான கருத்து கேட்பு கூட்டம் திடீர் ரத்து: ஒன்றிய அலுவலகத்தை 6 கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 2 Feb 2020 4:30 AM IST (Updated: 2 Feb 2020 3:19 AM IST)
t-max-icont-min-icon

சாலை விரிவாக்க பணிக்கான கருத்து கேட்பு கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டதால், ஒன்றிய அலுவலகத்தை 6 கிராமங்களை சேர்ந்த மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லிக்குப்பம்,

கடலூரில் இருந்து மடப்பட்டு வரையில் உள்ள சாலை, விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. இதில் அண்ணாகிராமம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்மாபேட்டை, கண்டரக்கோட்டை, தொரப்பாடி, பணப்பாக்கம், கணிசப் பாக்கம், சித்திரைச்சாவடி ஆகிய பகுதிகளில் சாலை விரிவாக்க பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது.

இதற்கான கருத்து கேட்பு கூட்டம் கணிசப்பாக்கத்தில் கடந்த 25-ந்தேதி நடைபெறும் என்று நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், குறிப்பிட்ட நாளில் கூட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில், நெல்லிக்குப்பம் அடுத்த அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 1-ந்தேதி(அதாவது நேற்று) பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என நெடுஞ்சாலைத்துறை சார்பில் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

முற்றுகை

அதன்படி, நேற்று காலை தி.மு.க. ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் மற்றும் அம்மாபேட்டை உள்பட 6 கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் அண்ணாகிராமம் ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துவதற்கான அதிகாரிகள் அங்கு வரவில்லை. இதனால் கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்கள் மதியம் வரை காத்திருந்தனர். இருப்பினும் வருவாய்த்துறையில் நில எடுப்பு அலுவலர்கள் யாரும் அங்கு வரவில்லை.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு போன் செய்து கேட்டனர். அப்போது கூட்டம் இன்று(அதாவது நேற்று) நடைபெறாது, ரத்து செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்தனர். கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணத்தை ஏன் எங்களிடம் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை, காலை முதல் காத்திருந்ததால், தங்களது ஒரு நாள் வேலைகள் அனைத்தும் செய்ய முடியாமல் போய்விட்டதாகவும், தங்களை வீண் அலைச்சலுக்கு உள்ளாக்கி விட்டதாகவும் கூறி ஒன்றிய அலுவலகத்தை 6 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டு, கண்டன கோ‌‌ஷம் எழுப்பினார்கள்.

சாலை விரிவாக்க பணி வேண்டாம்

அப்போது அங்கிருந்த நெடுஞ்சாலை துறையினர், நில எடுப்பு அலுவலர்கள் வராததால் தான் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே அவர்களிடம் இது தொடர்பாக கேட்டு தெரிந்து கொள்ளுமாறு தெரிவித்தனர். ஆனால் பொதுமக்கள் தரப்பில், நாங்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்ததே, நிலத்தை ஒப்படைத்து இழப்பீடு பெற்றுக்கொள்வதற்காக அல்ல, எங்களுக்கு இந்த சாலை விரிவாக்கம் செய்யும் திட்டம் வேண்டவே வேண்டாம் என்று கூறுவதற்காக திரண்டு வந்தோம் என்று, கூறிவிட்டு அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story