ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி 18-ந்தேதி சாலை மறியல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவிப்பு


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி 18-ந்தேதி சாலை மறியல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Feb 2020 10:45 PM GMT (Updated: 2 Feb 2020 4:03 PM GMT)

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி வருகிற 18-ந் தேதி திருவாரூர் மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவித்துள்ளது,

திருவாரூர்,

திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ராஜா தலைமை தாங்கினார். திருவாரூர் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். இந்தியாவை நாடி வந்த அனைத்து மக்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் சார்பில் வருகிற 8-ந் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்துவது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல்துறையின் அனுமதி தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

சாலை மறியல்

மத்திய அரசின் இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பபெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தியும் வருகிற 18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) திருவாரூர் மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்டதுணைச்செயலாளர் ஞானமோகன், முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.தமயந்தி, இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் துரை.அருள்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story