எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு எந்திரங்களை சிறைபிடித்து போராட்டம்


எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு எந்திரங்களை சிறைபிடித்து போராட்டம்
x
தினத்தந்தி 3 Feb 2020 4:30 AM IST (Updated: 3 Feb 2020 2:36 AM IST)
t-max-icont-min-icon

மண்டபம் யூனியன் வாலாந்தரவை ஊராட்சி பகுதியில் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்களை பதிக்கும் பணிக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பணியில் ஈடுபட்டிருந்த எந்திரங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் வாலாந்தவை ஊராட்சிக்கு உட்பட்ட வழுதூர் மற்றும் தெற்குக்காட்டூர் ஆகிய கிராமங்களில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் வழுதூர், வாலாந்தரவை, தெற்கு காட்டூர், திருப்புல்லாணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி மின் உற்பத்தி திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இதன் அருகில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எரிவாயு சேமிப்பு கிடங்கும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இங்கிருந்து இயற்கை எரிவாயுவை தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் பூமிக்கடியில் குழாய்கள் பதிக்க திட்டமிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு வாலாந்தரவை ஊராட்சியில் 8 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த திட்டத்தால் தங்களது விவசாய நிலங்கள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள நிறுவனங்கள் மூலம் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இங்கு செயல்படும் இயற்கை எரிவாயு சேமிப்பு கிடங்கு மற்றும் மின் உற்பத்தி நிலையங்களால் மழை பெய்வது கூட தடுக்கப்பட்டு கடும் வறட்சி நிலவி வருவதாகவும் கடந்த காலங்களில் சாயல்குடி மற்றும் ராமநாதபுரத்தில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டங்களிலும் புகார்கள் தெரிவித்திருந்தனர். இதனால் இப்பகுதியில் பூமிக்கடியில் குழாய் பதிக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

போராட்டம்

இந்த நிலையில் வாலாந்தரவை ஊராட்சி பகுதியில் விவசாயிகள் அனுமதியின்றி விவசாய பயிர்களை அழித்து எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து அப்பகுதி விவசாயிகள் குழாய் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்தியதுடன் எந்திரங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது விவசாயம் நாசமாக்கப்படுவதாகவும், இதுகுறித்து உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த விவசாயி சரவணன் என்பவர் கூறும்போது, கடந்த 20 ஆண்டுகளாக எங்கள் பகுதியில் பூமிக்கடியில் இருந்து இயற்கை எரிவாயு எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் எங்களின் விவசாய இடங்களை முற்றிலும் பாழ்படுத்தி விட்டனர். விவசாயிகளின் வாழ்வாதாரம் இப்பகுதியில் கேள்விக்குறியாகி உள்ளது. தற்போது ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு கொண்டு செல்வதற்காக விவசாயிகள் அனுமதியில்லாமல் குழாய்கள் பதிக்கும் பணிகளில் அதிகாரிகள் அத்துமீறி ஈடுபட்டு வருகின்றனர்.

தென்னை, கடலை, மிளகாய், எள், பனை உள்ளிட்ட விவசாய இடங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தடுத்து நிறுத்தி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அல்லது இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று தெரிவித்தார்.


Next Story