18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க வேண்டும் சிறப்பு பார்வையாளர் வேண்டுகோள்


18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க வேண்டும் சிறப்பு பார்வையாளர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 3 Feb 2020 4:30 AM IST (Updated: 3 Feb 2020 2:42 AM IST)
t-max-icont-min-icon

18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க வேண்டும் என்று அரசு கூடுதல் செயலாளரும், வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளருமான சம்பத் தெரிவித்தார்.

சிவகங்கை,

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனைக் கூட்டம் சிவகங்கை மாவட்ட வாக்காளர்பட்டியல் சிறப்பு பார்வையாளரும், அரசு கூடுதல் செயலருமான வி.சம்பத் தலைமையில் நடைபெற்றது.

பின்பு சிறப்பு பார்வையாளர் பேசியதாவது:- மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியல் 100 சதவீதம் ஆய்வு செய்து அதனடிப்படையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு களஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, இரண்டாம் கட்ட ஆய்வுக்கூட்டம் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் ஒருவர் கூட விடுபடக்கூடாது என்பதற்காக இந்த ஆய்வு நடைபெறகிறது.

எனவே ஒவ்வொரு வாக்குச்சாவடி மைய அலுவலரும் களஆய்வு மேற்கொண்டு பணிகளை கண்காணிக்க வேண்டும். மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க தங்கள் பகுதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம் குறித்து முன்கூட்டியே தெரிவித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களிடையே வாக்காளர் சேர்ப்பு குறித்து பணிகள் நடைபெறுவது குறித்து விழிப்பணர்வை ஏற்படுத்த வேண்டும் யாரும் விடுபடாத அளவிற்கு வாக்காளர் சேர்க்கை 100 சதவிகிதம் முழுமையடைய வேண்டும்

ஜனநாயக கடமை

மேலும், புதிய வாக்காளர் சேர்ப்பு குறித்து பெறப்பட்ட விண்ணப்பம் மீது உடனடியாக களஆய்வு செய்து உறுதி செய்திட வேண்டும். அதே போல் 18 வயது நிரம்பியவர்கள் அனைவரையும் கண்டறிந்து அவர்களை வாக்காளராக சேர்த்திட வேண்டும். மேலும், பிப்ரவரி மாதம் வெளியிட உள்ள இறுதி வாக்காளர் பட்டியலுக்கு முன்பாக பெறப்படும் விண்ணப்பங்களை சேர்ப்பதற்கு ஏற்ப புதிய வாக்காளர்கள் குறித்து கண்டறிந்து அவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெற வேண்டும்.

வாக்குச்சாவடி மைய அலுவலர்களிடமும் மற்றும் தாலுகா அலுவலகங்களிலும், கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் விண்ணப்பித்தினை பெற்று பூர்த்தி செய்து வழங்கி, வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்திடலாம். ஜனநாயக கடமை என்பது ஒவ்வொருவரும் வாக்களிப்பதில் தான் உள்ளது எனவே இந்த பணியை சரியான முறையில் மேற்கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட அனைவரும் சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜா, தேர்தல் பிரிவு தாசில்தார் கந்தசாமி, துணை தாசில்தார் பிரபாகரன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர், சிவகங்கை நகராட்சி மற்றும் ஒக்கூர், ஊராட்சிப் பகுதிகளுக்கு சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி மற்றும் வாக்குச்சாவடி மையங்களின் உட்கட்டமைப்பு குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story