கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு காரில் கஞ்சா கடத்த முயன்ற தாய்-மகன் உள்பட 9 பேர் கைது


கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு காரில் கஞ்சா கடத்த முயன்ற தாய்-மகன் உள்பட 9 பேர் கைது
x
தினத்தந்தி 3 Feb 2020 4:30 AM IST (Updated: 3 Feb 2020 2:59 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு காரில் கஞ்சா கடத்த முயன்ற தாய்-மகன் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

கம்பம்,

தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு காரில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் கம்பம் நகராட்சி வாரச்சந்தையில் கேரள பதிவு எண் கொண்ட ஒரு சொகுசு கார் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்தது.

இதையடுத்து அந்த காரில் போலீசார் சோதனை செய்தனர். ஆனால் காருக்குள் ஒன்றும் இல்லை. இதற்கிடையே காரின் அடியில் ஒருவர் மெக்கானிக் வேலை செய்வது போல் படுத்திருந்தார். ஆனால் அவர் கையில் மெக்கானிக் கருவிகள் எதுவும் இல்லை. மாறாக அட்டைப் பெட்டிகளை ஒட்டும் டேப் மட்டும் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை ஜாக்கி போட்டு தூக்கினர்.

9 பேர் கைது

பின்னர் காரின் அடியில் சோதனையிட்டபோது சந்தேகப்படும் படியாக ஒட்டப்பட்டிருந்த டேப்பை பிரித்து பார்த்தனர். அப்போது 4½ கிலோ கஞ்சாவை பொட்டலங்களாக கட்டி ஒட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் பத்தினம் திட்டாவை சேர்ந்த ஜேயேஸ் (19) என்பது தெரியவந்தது. மேலும் அவர், கொடுத்த தகவலின் பேரில் கம்பம் குரங்குமாயன் தெருவை சேர்ந்த பாண்டியராஜன் மனைவி லதா (வயது 45), அவரது மகன் ஜெயக்குமார் (18), உலகத்தேவர் தெருவை சேர்ந்த அரசன் (40), கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த சிஜின் (24) பத்தனம்திட்டாவை சேர்ந்த அனந்து விஜயன் (22), ஜித்து (18), நவீன் (20), ஜிஜோ (18) ஆகியோரை மடக்கி பிடித்தனர். இவர்கள் 9 பேரும், கூட்டாக சேர்ந்து கஞ்சாவை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தாய்-மகன் உள்பட 9 பேரையும் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் கம்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story