திருவள்ளூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பங்கேற்பு


திருவள்ளூரில்   பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்   மாவட்ட கலெக்டர் பங்கேற்பு
x
தினத்தந்தி 4 Feb 2020 4:15 AM IST (Updated: 4 Feb 2020 3:31 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடந்தது.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் வேலைவாய்ப்பு, கடனுதவி, குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோருக்கான உதவித்தொகை என பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி 311 மனுக்களை அளித்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவற்றின் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அவர் ஆவடி வட்டம் தண்டுரை கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் என்பவர் நீரில் மூழ்கி இறந்ததற்காக அவரின் வாரிசுதாரரான சாமுண்டீஸ்வரி என்பவருக்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையையும், வருவாய் துறை சார்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு பழங்குடியினர் இன சான்றிதழ்களையும் வழங்கினார்.

பதக்கம் மற்றும் நற்சான்றிதழ்கள்

மேலும், முன்னாள் படை வீரர் நல அலுவலகம் சார்பாக அதிக கொடிநாள் நிதி வசூல் செய்து வழங்கிய வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோரை பாராட்டி ஆளுநரின் பதக்கம் மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது)பன்னீர்செல்வம், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் பார்வதி, முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குனர் அமீருன்னிஷா மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story