பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.பிரமுகர் மீது பா.ஜனதாவினர் தாக்குதல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோஷமிட்டதால் ஆத்திரம்


பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.பிரமுகர் மீது பா.ஜனதாவினர் தாக்குதல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோஷமிட்டதால் ஆத்திரம்
x
தினத்தந்தி 3 Feb 2020 11:15 PM GMT (Updated: 3 Feb 2020 11:11 PM GMT)

பொதுக்கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அ.தி.மு.க. பிரமுகர் கோஷம் எழுப்பியதால் ஆத்திரம் அடைந்த பா.ஜனதாவினர் அவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி,

பா.ஜனதா சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஊர்வலம், பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் பா.ஜனதா கட்சி தகவல் தொழில்நுட்பம் சமூக ஊடக பிரிவு சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜனதா நிர்வாகிகள் கலந்து கொண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பேசினார்கள்.

தாக்குதல்

இந்த கூட்டத்தில் பா.ஜனதாவினர் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் கட்சியினர் பேசிக் கொண்டிருந்த போது மேடையின் அருகில் நின்று கொண்டிருந்த ஒருவர் திடீரென குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், பிரதமர் மோடியை கண்டித்தும் கோஷம் எழுப்பினார்.

இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த பா.ஜனதாவினர் அந்த நபரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக அந்த நபரை பா.ஜனதாவினரிடம் இருந்து மீட்டனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

பரபரப்பு

இதில் அவர் திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியை சேர்ந்த ராஜா என்பதும், அ.தி.மு.க. பிரமுகர் என்பதும் அவர் மது போதையில் இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story