ஜோலார்பேட்டை அருகே குடிநீர் தொட்டி ஆபரேட்டர் வெட்டிக்கொலை


ஜோலார்பேட்டை அருகே குடிநீர் தொட்டி ஆபரேட்டர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 4 Feb 2020 10:15 PM GMT (Updated: 4 Feb 2020 11:13 AM GMT)

ஜோலார்பேட்டை அருகே குடிநீர் தொட்டி ஆபரேட்டரை மது குடிக்க அழைத்துச்சென்ற கும்பல் அவரது கைகளை பின்புறமாக கட்டி தலையில் கத்தியால் சரமாரி வெட்டி கொடூரமாக வெட்டிக்கொன்றுள்ளனர்.

ஜோலார்பேட்டை, 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த சின்னமூக்கனூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 43). இவர் அதே பகுதியில் ஊராட்சி மேல்நிலை குடிநீர் தொட்டி ஆப்ரேட்டராக பணி புரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த ரமேஷ்குமாரை யாரோ போன் செய்து மது அருந்த வரும்படி கூறியுள்ளனர்.

அதன்படி வீட்டை விட்டு வெளியே வந்தபோது அங்கு காத்திருந்தவர்கள் ரமேஷ்குமாரை மது கடைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை.

ரமேஷ்குமாரை அந்த கும்பல் தாமலேரிமுத்தூரை அடுத்த பாட்டாளி நகர் அருகே உள்ள ஏரிக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு அவரது கைகளை பின்புறம் கட்டி தாங்கள் வைத்திருந்த கத்தியால் தலையில் சரமாரியாக வெட்டினர். அப்போது ரமேஷ்குமார் அலறினார். அருகில் யாரும் இல்லாததால் இந்த சம்பவம் வெளியே தெரியவில்லை. இந்த சம்பவத்தில் ரமேஷ்குமார் ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அவரை கொலை செய்த கும்பல் உடனடியாக அங்கிருந்து தப்பி விட்டது.

தகவலறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த ரமேஷ்குமாரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட ரமேஷ்குமாருக்கு சுமதி என்கிற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

கொலை குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ்குமாரை கடைசியாக செல்போனில் தொடர்பு கொண்டவர்கள் யார்? அவர் சென்ற வழியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கும்பலை சேர்ந்தவர்கள் உருவம் பதிவாகியுள்ளதா? என ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் 3 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து அவர்களை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். கைகளை பின்புறம் கட்டி கொலை நடந்துள்ளதால் முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்ததா? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மதுக்கடையை இடமாற்றம் செய்யக்கோரி பொதுமக்கள் மறியல்; துணை போலீஸ் சூப்பிரண்டையும் முற்றுகை

குடிநீர் தொட்டி ஆபரேட்டர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் உள்ள மதுக்கடையை மாற்றக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடை மீது கல்வீசப்பட்டதோடு பேச்சுவார்த்தைக்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டையும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

ரமேஷ்குமார் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இடத்தில் ஏராளமானோர் திரண்டனர். அவரை கொலை செய்தவர்கள் மது குடிப்பதற்கு அழைத்துச்சென்றுதான் கொன்றுள்ளனர். கொலை நடந்த இடம் தாமலேரிமுத்தூர் பாட்டாளி நகர் ஏரிக்கரையாகும். அங்கு ஆரம்ப சுகாதார நிலையமும் உள்ளது. அங்கு மது குடிப்பவர்கள் அந்த வழியாக பெண்கள் செல்லும்போது ஆபாசமாக பேசி போதையில் மோதிக்கொள்கின்றனர். அந்த கடையானது ஒட்டப்பட்டியிலிருந்து புதுப்பேட்டை செல்லும் சாலையில் உள்ளது. ஏற்கனவே இந்த கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் ரமேஷ்குமார் கொடூரமாக கொலை செய்யப்பட்டதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மதுக்கடை அருகே திரண்டு கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி சாலையில் கற்களை வைத்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது டாஸ்மாக் கடை மீது கற்களையும் மதுபாட்டில்களையும் சிலர் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்ததும் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மறியலை கைவிடும்படி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் மறியலில் ஈடுபட்டவர்கள் உடனடியாக அரசு மதுபான கடையை மாற்ற வேண்டும் என கோரி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலுவை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் உயர் அதிகாரிகளை போலீசார் தொடர்பு கொண்டு பேசினர். அதன்பின்னர் கூறுகையில் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் அரசு மதுபான கடை மாற்றுவதாக உறுதி அளித்தனர். அதன்பிறகு போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story