வேளாண்மை, தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு கலெக்டர் ரத்னா தகவல்


வேளாண்மை, தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு கலெக்டர் ரத்னா தகவல்
x
தினத்தந்தி 4 Feb 2020 11:00 PM GMT (Updated: 4 Feb 2020 4:43 PM GMT)

வேளாண்மை, தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு ரூ.3 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ரத்னா கூறினார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் கூட்டுப்பண்ணையம் திட்டத்தில், உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள் மற்றும் வேளாண் எந்திரங்கள் விற்பனையாளர்களின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகள் பயன்பெறவும், வேளாண் எந்திரங்களை பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும் கூட்டு பண்ணையத்திட்டம் கடந்த 2017-18-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் நடப்பாண்டில் 310 உழவர் ஆர்வலர் குழுக்களும், அவற்றை ஒருங்கிணைத்து 62 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்காக தமிழக அரசால் ரூ.3 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கும், இத்திட்டம் மூலம் ரூ.5 லட்சம் மதிப்பில் வேளாண் எந்திரங்கள் கொள்முதல் செய்வதற்கு தொகுப்பு நிதி வழங்கப்பட உள்ளது.

பண்ணை எந்திரங்கள்

ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் குழுவும், தனது திட்ட செயலாக்க விளக்கத்தை தயாரித்து அளிக்க வேண்டும். இந்த செயலாக்கத்திட்டம் வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத் துறையின் ஒப்புதலை பெற்ற பின்னரே செயல்படுத்தப்படும். இந்த நிதியை கொண்டு உயர் விளைச்சல் பெறுவதற்கு உறுதுணை புரியும் பண்ணை கருவிகள், உபகரணங்கள் மற்றும் பண்ணை எந்திரங்கள் மட்டுமே வாங்க வேண்டும். வணிகத்திற்கேற்ற உபகரணங்களையோ, எந்திரங்களையோ உழவர் உற்பத்தியாளர் குழு- உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் வாங்கக்கூடாது. ஒரே உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் கீழ் அமையும் உற்பத்தியாளர் குழு பிற உற்பத்தியாளர் குழுவுடன் இணைந்து உபகரணங்களை கூட்டாகவும் வாங்கலாம். 2 குழுக்கள் இணைந்து ரூ.10 லட்சம், 3 குழுக்கள் இணைந்து ரூ.15 லட்சம், 4 குழுக்கள் இணைந்து ரூ.20 லட்சம், 10 குழுக்கள் இணைந்து ரூ.50 லட்சம் என்ற மதிப்புக்கும் பண்ணை எந்திரங்களை வாங்கி உபயோகிக்கலாம்.

மானியம்

ஒரு குழுவுக்கான ரூ.5 லட்சம் நிதியில், பண்ணை எந்திரங்கள் வாங்கும் போது, குறிப்பிட்ட தொகைக்கு மேல் தேவைப்படும் தொகையை குழுவிலுள்ள மற்ற விவசாயிகள் சம அளவில் பிரித்து செலுத்த வேண்டும். உழவர் உற்பத்தியாளர் குழுவினால் தொகுப்பு நிதியான ரூ.5 லட்சத்திற்கும் மேல் வாங்கப்படும் பண்ணை எந்திரங்களுக்கு, வேளாண் பொறியியல் துறையின் மானியம் வழங்கப்பட மாட்டாது. உழவர் உற்பத்தியாளர் குழுக்களின் நிர்வாகிகள், பண்ணை எந்திரங்களின் விற்பனையாளர்களிடம் நேரடியாக பேரம் பேசி விலையை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் வேளாண்மை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story