விழுப்புரத்தில் பட்டப்பகலில் பயங்கரம்: வெடிகுண்டு வீசி பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளர் படுகொலை


விழுப்புரத்தில் பட்டப்பகலில் பயங்கரம்: வெடிகுண்டு வீசி பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளர் படுகொலை
x
தினத்தந்தி 4 Feb 2020 11:15 PM GMT (Updated: 4 Feb 2020 5:20 PM GMT)

விழுப்புரத்தில் வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டி பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளர் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற கொலையாளிகள் கார், மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் கம்பன் நகரில் பிரகா‌‌ஷ் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இதன் மேலாளராக சீனிவாசன்(வயது 55) என்பவர் இருந்தார். இவரது சொந்த ஊர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா பனம்பாக்கம் கிராமம். ஆனால் இவர் குடும்பத்தினருடன் விழுப்புரம் மகாராஜபுரம் ஆனந்தம் நகரில் வசித்து வந்தார்.

வழக்கம் போல் நேற்று காலையில் வேலைக்கு சென்ற சீனிவாசன், பெட்ரோல் பங்கில் உள்ள உரிமையாளர் அறையில் அமர்ந்து இருந்தார். அப்போது பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு திடீரென ஒரு நீல நிற காரும், ஒரு மோட்டார் சைக்கிளும் வந்து நின்றது. மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் டென்னிஸ் பேட்டுடன் கூடிய ‘பேக்’கை மாட்டியிருந்தனர்.

பயங்கர சத்தம்

அவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவது போல வந்து நின்று கொண்டு, உரிமையாளர் எங்கே இருக்கிறார்? என்று அங்கிருந்த ஊழியரிடம் கேட்டுள்ளனர். அப்போது 3 பேரில் ஒருவர் திடீரென பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் அறைக்கு சென்று நாட்டு வெடிகுண்டை வீசினார். இதில் நாட்டு வெடிகுண்டு, மேலாளர் சீனிவாசன் மீது விழுந்து வெடித்ததில், அவர் நிலைகுலைந்தார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர், டென்னிஸ் பேட் பேக்கிற்குள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அவரை சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது. இதில் சீனிவாசன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே உரிமையாளர் அறைக்குள் வெடிகுண்டு வெடித்த சத்தம் கேட்ட ஊழியர்கள், உரிமையாளரின் அறையை நோக்கி ஓடி வந்தனர். அப்போது, அறையில் இருந்து ரத்தம் சொட்டிய அரிவாளுடன் வெளியே வந்த வாலிபர், ஊழியர்களை மிரட்டி விட்டு வெளியே தயார் நிலையில் நின்ற நீல நிற காரில் ஏறி தப்பிச்சென்றார். அந்த கார் புதுச்சேரி மார்க்கமாக மின்னல் வேகத்தில் சென்றது. பின்னர் அந்த காரை பின்தொடர்ந்து அந்த வாலிபருடன் வந்த 2 வாலிபர்களும் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர்.

இந்த பயங்கர சம்பவம் நேற்று காலை 11-30 மணி அளவில் பட்டப்பகலில் நடந்தது. இந்த கொலை பற்றி நகருக்குள் காட்டுத்தீயென தகவல் பரவியதால் அங்கு ஏராளமானவர்கள் திரண்டனர்.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இது பற்றி தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

இதன்பிறகு சீனிவாசனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த படுகொலை குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட சீனிவாசனுக்கு மீரா என்ற மனைவியும், சங்கரி என்ற மகளும் உள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த படுகொலை சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story