முசிறி அருகே பயங்கரம் திருமணமான 8 மாதத்தில் கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற என்ஜினீயர்


முசிறி அருகே பயங்கரம் திருமணமான 8 மாதத்தில் கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற என்ஜினீயர்
x
தினத்தந்தி 4 Feb 2020 11:15 PM GMT (Updated: 4 Feb 2020 8:05 PM GMT)

முசிறி அருகே, வேலைக்கு செல்ல வற்புறுத்தியதால், திருமணமான 8 மாதத்தில் கர்ப்பிணி மனைவியை, கத்தியால் குத்திக்கொலை செய்த என்ஜினீயரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முசிறி,

திருச்சி மாவட்டம், முசிறி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பார்வதிபுரம் பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ். வக்கீல். இவரது மகன் கமல்காந்த் (வயது 33). என்ஜினீயரான இவர் சிங்கப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், புள்ளம்பாடி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியனின் மகள் என்ஜினீயரான ஜீவிதாவிற்கும் (26) கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பின்னர் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற கமல்காந்த், சில மாதங்களிலேயே திரும்பி வந்து விட்டார். பின்னர் அவர் சரியாக வேலைக்கு செல்லாததால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

கர்ப்பிணி ெகாலை

இந்நிலையில் ஜீவிதா தற்போது 2 மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று காலை வீட்டின் மாடி அறையில் இருந்தபோது, ஜீவிதா கமல்காந்தை வேலைக்கு செல்லுமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த கமல்காந்த் அருகில் இருந்த கத்தியை எடுத்து ஜீவிதாவின் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால் நிலைகுலைந்த ஜீவிதா கட்டில் படுக்கையில் விழுந்தநிலையில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கமல்காந்த் தனது கையை கத்தியால் அறுத்து கொண்டதால், ரத்தம் சொட்டச்சொட்ட மாடியில் இருந்து கீழே இறங்கி வந்துள்ளார்.

போலீசார் விசாரணை

இதனை பார்த்த கமல்காந்தின் தாய் சத்தம்போட்டதால், அருகில் வசிப்பவர்கள் அங்கு வந்தனர். அவர்கள், கமல்காந்்தை முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று, ஜீவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிந்து கமல்காந்திடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் ஜீவிதாவுக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆவதால், இந்த சம்பவம் குறித்து முசிறி சப்-கலெக்டர் பத்மஜா மேல் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story