கழிவுநீர் வடிகால் கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


கழிவுநீர் வடிகால் கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 4 Feb 2020 10:52 PM GMT (Updated: 4 Feb 2020 10:52 PM GMT)

கழிவுநீர்வடிகால் கட்ட எதிர்ப்பு தெரிவித்து அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

அவினாசி,

அவினாசி வேலாயுதம்பாளையம் குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது வேலாயுதம்பாளையம் பகுதியில் கழிவு நீர் வடிகால் கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். பின்னர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அவினாசி அருகே வேலாயுதம்பாளையம் ஊராட்சி மகா நகர் குடியிருப்பு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. எங்கள் குடியிருப்பு பகுதி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. அவினாசி-மங்கலம் சாலையின்மேல் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தின் இருபுறமும் உள்ள 2 கிலோ மீட்டர் தூரத்திற்கான வடிகால் எங்கள் குடியிருப்பு பகுதியில் வருமாறு அமைத்துள்ளனர்.

இந்த பிரச்சினை குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மனு கொடுத்தும் இதுவரை தீர்வு காணவில்லை. இதனால் எங்கள் பகுதி குடியிருக்க தகுதியற்ற இடமாக மாற்றப்பட்டு வருகின்றது. மழைக்காலத்தில் மழைநீர் தேங்குவதால் வீட்டைவிட்டு வெளியில் வர முடியாத நிலை உள்ளது. கழிவு நீர் தேங்குவதால் நோய் தொற்று மிக அதிகமாக ஏற்படுகிறது.

இந்த நிலையில் எங்கள் குடியிருப்பு எதிர்புறம் தேவராயம்பாளையம் கிராமத்திற்கு செல்லும் வழியில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் தற்போது கட்டப்பட்டு வரும் புதிய வடிகாலுடன் இணைக்கபட உள்ளது. எனவே கழிவுநீர் வடிகால் கட்டும் பணியை நிறுத்தி எங்களின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story