பங்குகளை விற்க எதிர்ப்பு: எல்.ஐ.சி. ஊழியர்கள் வேலை நிறுத்தம்


பங்குகளை விற்க எதிர்ப்பு: எல்.ஐ.சி. ஊழியர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 5 Feb 2020 3:45 AM IST (Updated: 5 Feb 2020 9:52 AM IST)
t-max-icont-min-icon

எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி,

நாடாளுமன்றத்தில் கடந்த 1-ந் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் எல்.ஐ.சி. நிறுவன பங்குகள் தனியாருக்கு விற்கப்பட இருப்பதாக அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு எல்.ஐ.சி. அதிகாரிகள், ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இதற்கு கண்டனம் தெரிவித்தும், இந்த முடிவை கைவிட கோரியும் போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் அடையாளமாக ஒரு மணி நேரம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட எல்.ஐ.சி. ஊழியர்கள் முடிவு செய்திருந்தனர். அதன்படி திருச்சியில் நேற்று எல்.ஐ.சி. ஊழியர்கள் 1 மணி நேரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதாவது பகல் 12 முதல் 1 மணி வரை வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

மேலும், திருச்சி ஜங்ஷன் அருகே உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்க கோட்ட துணை தலைவர் ஜோன்ஸ் தலைமை தாங்கினார். முதல் நிலை அதிகாரிகள் சங்க நிர்வாகி கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். எல்.ஐ.சி. முகவர்கள் சங்க தென் மண்டல செயற்குழு உறுப்பினர் வேலுச்சாமி கோரிக்கை குறித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது எல்.ஐ.சி.யின் பங்குகளை தனியாருக்கு விற்க எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இந்த வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டத்தில் எல்.ஐ.சி. அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். மேலும் எல்.ஐ.சி. முகவர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

மத்திய அரசு தனது முடிவை மாற்றாவிட்டால் அடுத்த கட்டமாக நாடு முழுவதும் மக்களை திரட்டி தொடர் போராட்டம் நடத்தப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Next Story