ஆடியோ பிளேயர், ஆடைக்குள் மறைத்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் பறிமுதல்


ஆடியோ பிளேயர், ஆடைக்குள் மறைத்து கடத்தல்:   சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 5 Feb 2020 11:00 PM GMT (Updated: 5 Feb 2020 8:05 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் ஆடியோ பிளேயர் மற்றும் ஆடைக்குள் மறைத்து வைத்து கடத்திய 1 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு பிரான்சில் இருந்து ஒமென் வழியாக விமானம் வந்தது. அதில் பயணம் செய்த பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்ற முகமது ஹாரூன் மரைக்கார்(வயது 55) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர்.

அவரது உடைகளை சோதனை செய்தனர். அதில் அவர், ஆடைக்குள் 1 தங்க சங்கிலி, 2 தங்க கட்டிகள், 70 தங்க காசுகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.37 லட்சம் மதிப்புள்ள 990 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆடியோ பிளேயர்

அதேபோல் தாய்லாந்தில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அமந்தீப் சிங்(26) என்பவரை நிறுத்தி, அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் அவரிடம் ஆடியோ பிளேயர் இருந்தது.

சந்தேகத்தின்பேரில் அதை பிரித்து பார்த்தபோது அதில் வெள்ளி முலாம் பூசப்பட்ட 32 தகடுகள் இருந்தன. அவற்றை சோதனை செய்தபோது அவை அனைத்தும் தங்க தகடுகள் என்பது தெரிந்தது. அவரிடம் இருந்து ரூ.10 லட்சத்து 83 ஆயிரம் மதிப்புள்ள 259 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் 2 பேரிடம் இருந்து ரூ.47 லட்சத்து 83 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 249 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக முகமது ஹாரூன் மரைக்காரை கைது செய்தனர். அமந்தீப் சிங்கிடம் விசாரித்து வருகின்றனர்.

Next Story