திருவாரூர் மாவட்டத்தில், இதுவரை 1 லட்சத்து 5 ஆயிரம் டன் நெல் கொள்முதல்
திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 5 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 49 ஆயிரம் எக்டேர் பரப்பில் சம்பா, தாளடி சாகுபடி நடைபெற்றுள்ளது. தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆள் பற்றாக்குறை காரணமாக எந்திரங்கள் மூலம் அறுவடை நடைபெற்று வரும் நிலையில், வேளாண் பொறியியல் துறையில் அதிகமான அறுவடை எந்திரங்கள் இல்லாததால் தனியார் எந்திரங்களை பயன்படுத்த வேண்டிய நிலை இருந்து வருகிறது.
இதில் தனியார் அறுவடை எந்திரங்களுக்கு பற்றாக்குறை காரணமாக மணிக்கு ரூ.2 ஆயிரத்து 800-க்கு மேல் வாடகை தர வேண்டி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஏக்கருக்கு சராசரியாக 30 மூட்டைகள் மகசூல் கிடைக்க வேண்டிய நிலையில் புகையான் நோய் தாக்குதலால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. அறுவடை எந்திரங்கள் பற்றாக்குறையினால் பல பகுதிகளில் முழுமையாக அறுவடை நடைபெறாமல் வயலில் சாய்ந்த நெல் மணிகள் முளைத்து வருகின்றன.
இந்த ஆண்டு சம்பா சாகுபடி நன்றாக இருந்த நிலையில் பல்வேறு பிரச்சினையால் மகசூல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். சம்பா அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்ய 443 நெல் கொள்முதல் நிலையங்கள் மாவட்டம் முழுவதும் திறக்கப்பட்டுள்ளது. இதுவரை 1 லட்சத்து 5 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தம்புசாமி கூறியதாவது:-
அறுவடை எந்திரங்கள் பற்றாக்குறையினால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே அறுவடை எந்திரங்கள் தட்டுப்பாடின்றி கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் ஒரே இடத்தில் இருப்பதால் கொள்முதலில் தேக்க நிலை ஏற்படுகிறது.
ஒரு நாளைக்கு ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்திட வேண்டும். தற்போது உள்ள இயற்கை சூழ்நிலையை கருத்தில் கொண்டு நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதம் என்பதை 20 சதவீதமாக உயர்த்திட வேண்டும். கேரளா, சத்தீஸ்கர் மாநிலங்களில் வழங்குவதைபோல் நெல் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரத்து 500 வழங்கிட வேண்டும்.
கொள்முதலில் 40 கிலோ மூட்டைக்கு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. எனவே எந்தவித இடையூறின்றி நெல்லை கொள்முதல் செய்திட வேண்டும். விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட வேண்டும். கொள்முதலில் சிட்டா அடங்கல் தேவை என்ற விதிமுறைகளை விவசாயிகள் பாதிக்காதவாறு செய்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story