பெரம்பலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


பெரம்பலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Feb 2020 11:00 PM GMT (Updated: 6 Feb 2020 6:34 PM GMT)

பெரம்பலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிறுவன தலைவர் நாராயணசாமியின் 96-வது பிறந்தநாளையொட்டி நேற்று பெரம்பலூரில், மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்ட தலைவர் மாணிக்கம், செயலாளர் நீலகண்டன், பொருளாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்லத்துரை, பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் சீனிவாசன் ஆகியோர் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பேசினர்.

பின்னர் சங்கத்தின் அரியலூர் மாவட்ட செயலாளர் விசுவநாதன் தலைமையில், சங்கத்தினர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள நாராயணசாமியின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அரியலூர் மாவட்ட தலைவர் அன்பழகன் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து விவசாயிகள் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையை

அப்போது அவர்கள் தற்போது தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசு பட்ஜெட்டில் விவசாயிகள் எதிர்பார்த்த கடன் தள்ளுபடி, வட்டி மானிய சலுகை, விவசாய விளை பொருட்களுக்கு நிர்ணயம் செய்யும் விலையை விட கூடுதலாக 50 சதவீதம் சேர்த்தும் விலை உயர்த்தும் சலுகை, பிரதமர் வேளாண் காப்பீடு திட்டம் பயனளிக்கும் விதமாக தனிநபர் காப்பீடு திட்டமாக மாற்றப்படும் என்ற அறிவிப்புகளை அறிவிக்காமல் விவசாயிகளை மத்திய அரசு ஏமாற்றி விட்டது.

எறையூரில் உள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை ரூ.39 கோடியை உடனடியாக மத்திய அரசு வழங்குவதற்கு மாநில அரசு வலியுறுத்த வேண்டும். கொட்டரை நீர்த்தேக்க திட்டத்தை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், சின்னமுட்லு நீர்த்தேக்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சான்று அளிக்க வேண்டும்

வறட்சி, பயிர்களில் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டு வரும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் நிலங்களை குத்தகை எடுத்து விவசாயம் செய்யும் விவசாயிகளை, அதற்கான அரசின் நிவாரண உதவித் தொகையை பெறுவதற்கு குத்தகை தாரராக பதிவு செய்து சான்று அளிக்க வேண்டும். பயிர்களில் நோய் தாக்குதலை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து தடுக்க வேண்டும்.

கிடப்பில் போடப்பட்ட பெரம்பலூரில் அரசு மருத்துவ கல்லூரி தொடங்கும் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோ‌‌ஷங்களை எழுப்பினர். மேலும் பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளை சந்திக்க மறுத்த தமிழக சட்டமன்ற குழுவினரை கண்டித்தும் கோ‌‌ஷங்களை விவசாயிகள் எழுப்பினர்.

Next Story