தேன்கனிக்கோட்டை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் பரபரப்பு


தேன்கனிக்கோட்டை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Feb 2020 4:30 AM IST (Updated: 7 Feb 2020 1:17 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை ஊருக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேன்கனிக்கோட்டை,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மரக்கட்டா வனப்பகுதியில் 15-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் சுற்றித்திரிகின்றன. இந்த காட்டு யானைகள் இரவு நேரத்தில் வனப்பகுதியின் அருகில் உள்ள கிராமங்களுக்குள் சென்று அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து ராகி, தக்காளி, பீன்ஸ், முட்டைக்கோஸ் உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்த யானைகளில் ஒரே ஒரு யானை மட்டும் எந்த யானை கூட்டங்களுடனும் சேராமல் தனியாக சுற்றித் திரிகிறது. மேலும் அந்த யானை ஆக்ரோ‌‌ஷமாக சுற்றித்திரிகிறது. பொதுமக்களால் கிரி என்று அழைக்கப்படும் இந்த யானை நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து மரக்கட்டா கிராமத்திற்குள் புகுந்து அப்பகுதியை சேர்ந்த சரஸ்வதி என்ற பெண்ணை மிதித்து கொன்றது.

ஊருக்குள் புகுந்தது

இந்தநிலையில் நேற்று காலையில் மரக்கட்டா வனப்பகுதியில் இருந்து கிரி யானை வெளியே வந்தது. பின்னர் அது அருகில் உள்ள தண்டகானப்பள்ளி என்ற ஊருக்குள் புகுந்து சாலையில் நீண்ட நேரமாக சுற்றித் திரிந்தது. இதனால் அப்பகுதி மக்களும், அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அவர்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பட்டாசுகள் வெடித்து அந்த யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஆக்ரோ‌‌ஷமடைந்த யானை வனத்துறையினரை தாக்க ஓடி வந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் அதனை வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

வனத்துறை எச்சரிக்கை

கிரி என்னும் இந்த காட்டு யானை ஆக்ரோ‌‌ஷமாக சுற்றித் திரிவதால் மரக்கட்டா வனப்பகுதியை ஒட்டியுள்ள தண்டகானப்பள்ளி, கோட்டூர், கரகூர், வரதாரெட்டிபாளையம், மரக்கட்டா, நொகனூர், பாலதொட்டனப்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story