குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் மூண்டுள்ளது கனிமொழி எம்.பி. பேச்சு


குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் மூண்டுள்ளது கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 9 Feb 2020 6:00 AM IST (Updated: 9 Feb 2020 5:15 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் மூண்டுள்ளது என்று ராமநாதபுரத்தில் கனிமொழி எம்.பி. பேசினார்.

ராமநாதபுரம்,

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில் அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற்ற கண்டன பொதுக்கூட்டம் ராமநாதபுரம் சந்தை திடலில் மாவட்ட தலைவர் வருசை முகமது தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் சாதுல்லாகான் முன்னிலை வகித்தார். செயலாளர் முகமது பைசல் வரவேற்றார். தேசிய தலைவர் காதர் முகையதீன், தி.மு.க. மகளிரணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி., நவாஸ்கனி எம்.பி., காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் சண்முகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜகான் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசும்போது கூறியதாவது:-

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம், ஆர்ப்பாட்டம், கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றோம். நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கும்போது இந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன? விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என கூறினார்கள். ஆனால் 10 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். நாட்டை பிரிக்க, மக்களை பிளவுபடுத்த இந்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கே எதிரானது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் இன்னொரு விடுதலை போராட்டம் மூண்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

தலைகுனிவு

கூட்டத்தில் நவாஸ்கனி எம்.பி. பேசும்போது, குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய நாடு அமைதியை இழந்து விட்டது. இந்த சட்டத்தால் உலக அளவில் இந்தியாவிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த சட்டத்தால் பாதிப்பு இல்லை என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் கூறுவதை ஏற்க முடியாது. இந்த சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், மாவட்ட காங்கிரஸ் தலைவர் தெய்வேந்திரன், முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், தி.மு.க. தீர்மானக்குழு துணைத் தலைவர் சுப.த.திவாகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் திசைவீரன், துணைத் தலைவர் சாயல்குடி வேலுச்சாமி, யூனியன் தலைவர்கள் (ராமநாதபுரம்) பிரபாகரன், (திருப்புல்லாணி) புல்லாணி, ஐக்கிய ஜமாத் செயலாளர் ஜெய்னுல் ஆலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. முடிவில் ரபீக் ரகுமான் நன்றி கூறினார்.

Next Story