தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.5¼ கோடி மதிப்பிலான வழக்குகளுக்கு தீர்வு அதிகபட்சமாக ரூ.18.50 லட்சம் இழப்பீடு


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.5¼ கோடி மதிப்பிலான வழக்குகளுக்கு தீர்வு அதிகபட்சமாக ரூ.18.50 லட்சம் இழப்பீடு
x
தினத்தந்தி 9 Feb 2020 5:53 AM IST (Updated: 9 Feb 2020 5:53 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.5¼ கோடி மதிப்பிலான வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதிகபட்சமாக ரூ.18.50 லட்சம் இழப்பீடு வழங்கவும் சமரசம் ஏற்பட்டது.

புதுச்சேரி,

மாநில சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் புதுவை மாநிலத்தில் நேற்று நடந்தது. கடலூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த இதன் தொடக்க நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி தனபால் கலந்துகொண்டு மக்கள் நீதிமன்றத்தை தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் ஷோபனாதேவி, நீதிபதிகள் சுபா அன்புமணி, ராபர்ட் கென்னடி ரமேஷ், வக்கீல்கள் சங்க தலைவர் முத்துவேலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

710 வழக்குகளுக்கு தீர்வு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் புதுச்சேரியில் 9 அமர்வுகள், காரைக்கால், மாகி, ஏனாமில் தலா ஒரு அமர்வு என மொத்தம் 12 அமர்வுகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், நேரடி வழக்குகள் என சுமார் 4 ஆயிரத்து 672 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில் 710 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

ரூ.5.23 கோடி

அந்த வழக்குகளில் மொத்தம் ரூ.5 கோடியே 23 லட்சத்து 29 ஆயிரத்து 935 மதிப்பிலான தொகைக்கு தீர்வு காணப்பட்டது. இவற்றில் 2008-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட செக் மோசடி வழக்கு, 2007-ல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட வழக்கு ஆகியவற்றுக்கு சமாதான முறையில் தீர்வு காணப்பட்டது.

மேலும் பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் மக்கள் நீதிமன்ற சமரச பேச்சினால் ஒன்று சேர்ந்து வாழ முடிவு செய்து மகிழ்ச்சியுடன் சென்றனர். மோட்டார் வாகன நஷ்டஈடு வழக்கில் ரூ.18.50 லட்சம் ஒரு வழக்கில் பாதிக்கப்பட்ட நபருக்கு மக்கள் நீதிமன்றத்தின் வாயிலாக வழங்க தீர்வுகாணப்பட்டது. மேலும் தொழிலாளர் நல வழக்கு ஒன்றில் ஒரு பெண் பணியாளருக்கு ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் நஷ்டஈடு வழங்கவும் தீர்வு காணப்பட்டது.

Next Story