சேலத்தில் ஐ.பி.எல்.போட்டிகளை நடத்த அரசு துணை நிற்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
புதிய கிரிக்கெட் மைதானம் திறப்பு விழாவில் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த அரசு துணை நிற்கும் என்று கூறினார்.
சேலம்,
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காட்டுவேப்பிலைப்பட்டியில் சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் சார்பில் 16 ஏக்கர் பரப்பளவில் புதிதாக கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சிவகுமரன் வரவேற்று பேசினார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவரும், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான என். சீனிவாசன், முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், சித்ரா எம்.எல்.ஏ., வாழப்பாடி ஒன்றிய குழு தலைவர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
விளையாட்டுக்கு முக்கியத்துவம்
இளைய சமுதாயத்தினரின் அறிவு வளர்ச்சியை மட்டுமல்லாது, அவர்களது உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி, உடல் நலம் ஆகியவற்றை பேண வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அரசு, கல்விக்கு அளிக்கும் அதே முக்கியத்துவத்தை விளையாட்டிற்கும் அளித்து வருகிறது.
1995-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு போட்டிகளுக்காக, உலகத்தரம் வாய்ந்த ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், நேரு உள் விளையாட்டரங்கம், மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி விளையாட்டு அரங்கம், நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கம், வேளச்சேரி நீச்சல் வளாகம் ஆகிய விளையாட்டு அரங்கங்கள் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டன. இந்த அரங்குகள் அனைத்தும் நவீன வசதிகளுடன் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளன.
ஊக்கத்தொகை
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல் கலைக்கழகம் 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் உலக சதுரங்க போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்பட்டது. அரசு மற்றும் பொதுத் துறை வேலை வாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தலை சிறந்த விளையாட்டு வீரர்களை பணி நியமனம் செய்ய வழிவகை செய்து ஆணை வெளியிடப்பட்டது. இதுவரை தமிழ்நாட்டை சேர்ந்த 3 தலைசிறந்த சர்வதேச விளையாட்டு வீரர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஒலிம்பிக், ஆசிய, காமன்வெல்த், தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வெல்லும் தமிழக வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை கவுரவிக்கும் வகையில், உயரிய ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உயரிய ஊக்கத் தொகை விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமன்றி, சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இது வரை 925 விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ரூ.49 கோடியே 28 லட்சம் உயரிய ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு விளையாட்டை ஊக்குவிக்கின்ற அரசாக இந்த அரசு உள்ளது.
விளையாட்டு மேம்பாட்டுஆணையம்
ஒலிம்பிக் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் பெற வாய்ப்புள்ள திறன் வாய்ந்த 12 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து, சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத் தொகையாக, ஆண்டு ஒன்றுக்கு ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
1992-ம் ஆண்டு இளைஞர், விளையாட்டு பயிற்சித் துறை மற்றும் தமிழ்நாடு மாநில விளையாட்டு வாரியம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு இணையான ‘‘தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்’’ மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டது. இந்த ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, தமிழ்நாட்டு இளைஞர்கள் இன்று தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடக்கும் அனைத்து போட்டிகளிலும் பங்கு பெற்று சாதனை படைத்து வருகிறார்கள்.
கிராமப்புற இளைஞர்கள்
12 ஆயிரத்து 524 ஊராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் ரூ.76 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டில் ‘‘அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்’’என்ற திட்டத்தை தொடங்கி வைத்திருக்கின்றோம். இந்த திட்டத்தின் மூலம் கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் கிரிக்கெட், கபடி, கைப்பந்து, பூப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு மைதானங்கள் அமைப்பதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு, அப்பணிகள் தற்போது துரிதமாக முடிக்கப்பட்டு வருகின்றன.
இந்த விளையாட்டுகளுக்கு தேவையான உபகரணங்கள், பயிற்சிகள் மற்றும் கருவிகளை ஒரு வருட காலம் தொடர்ந்து வழங்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். ஒன்றிய, மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு, மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தின் மூலம் கிராமங்களில் அமைக்கப்படும் கிரிக்கெட் மைதானத்தால் கிராமப்புற இளைஞர்கள் அதிக அளவில் ஊக்கப்படுத்தப்படுவார்கள். இதன் விளைவாக வருங்காலத்தில், தமிழ்நாட்டில் இருந்து குறிப்பாக கிராமப்புறத்தில் இருந்து இளைஞர்கள் அதிக அளவில் மாநில மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளில் இடம் பெற்று, சர்வதேச போட்டிகளில் பங்கு கொள்ளும் நிலை உருவாகும்.
ரூ.3 கோடி
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மூலமாக நிர்வகிக்கப்படுகிறது. அந்த மைதானத்தில் உள்ள 3 கேலரிகள் சில பிரச்சினைகள் காரணமாக வெகு காலமாக உபயோகப்படாத நிலையில் இருந்தது. இப்பிரச்சினைகளை எங்களுடைய அரசு களைந்துள்ளது. அதன் அடிப்படையில், அனைத்து கேலரிகளிலும் ரசிகர்கள் போட்டிகளை கண்டுகளிக்கும் வகையில் விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சேலம் அருகே உள்ள வாழப்பாடியில் ரூ.3 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த கிரிக்கெட் மைதானம், இப்பகுதியில் வசிக்கும் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இப்பகுதியில் மட்டுமல்ல, இந்த மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள இளைஞர்களும் இங்கே வந்து ஆர்வமுடன் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கின்றது. இப்பகுதியில் உள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களது பங்கேற்புடன் இந்த மைதானத்தில் போட்டிகளை நடத்த வேண்டும்.
ஐ.பி.எல். போட்டிகள்
கிரிக்கெட் வாரிய தலை வராக என்.சீனிவாசன் இருந்தபோது, பல்வேறு சாதனைகளை புரிந்திருக்கின்றார். தமிழகம் மட்டுமல்ல, உலகளவில் அவர் பெயரைச் சொன்னால், குறிப்பிட்டுச் சொன்னால், கிரிக்கெட் தந்தை என்றுகூட சொல்லலாம், அந்தளவிற்கு கிரிக்கெட் மீது நேசம் கொண்டவர், நேசிக்கக்கூடியவர். அப்படி நேசிக்கக்கூடியவர் இருக்கக்கூடிய காரணத்தினாலேதான் இப்படிப்பட்ட மைதானம் நமக்கு கிடைத்திருக்கின்றது. அவர் ஐ.பி.எல். கிரிக்கெட் இந்த மைதானத்திலே நடைபெறும் என்ற ஒரு அறிவிப்பை இங்கே வெளியிட்டிருக்கின்றார், உண்மையிலேயே நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இதுவரை, ஐ.பி.எல். விளையாட்டு போட்டிகள் சென்னையில் தான் நடந்ததாக நான் அறிகிறேன். தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் ஐ.பி.எல். போட்டி நடைபெறவில்லை. முதன்முதலாக தமிழகத்தில் உள்ள சேலம் மாவட்டம், வாழப்பாடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்டமான கிரிக்கெட் மைதானத்திலே ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்ட என்.சீனிவாசனுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஐ.பி.எல். போட்டி நடைபெறுவதற்கு தேவையான வசதிகளை மேற்கொள்ள வேண்டும், அதற்கு அரசு துணை நிற்க வேண்டுமென்று இங்கே சீனிவாசன் கேட்டுக் கொண்டார். அதற்கு, எங்களுடைய அரசு அனைத்து வகையிலும் உங்களுக்கு துணை நிற்கும். அதுமட்டுமல்லாமல், எந்த விளையாட்டை எடுத்து கொண்டாலும் முதன்மையாக வரவேண்டும் என்ற ஆர்வமோடு விளையாடி சாதனை படைக்கக்கூடிய வீரர்கள் நம்முடைய தமிழக இளைஞர்கள்.
16 காளைகளை அடக்கிய இளைஞர்
தற்போது நம்முடைய இளைஞர்கள் அதிகளவில் ஜல்லிக்கட்டில் ஈடுபட்டு நம்முடைய வீரத்திறமையை காட்டுகின்றனர். அண்மையில்கூட, உலக பிரசித்தி பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே நபர் 16 காளைகளை அடக்கியுள்ளார். அவருக்கு காரை பரிசாக வழங்கினோம். அப்படி, ஒரே ரவுண்டில் 16 ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கக்கூடிய திறமைபடைத்த இளைஞர் தமிழ் மண்ணிலே பிறந்து, நமது பாரம்பரிய விளையாட்டை நிலைநாட்டியிருக்கின்றார்.
நம்முடைய இளைஞர்கள் அனைத்து விளையாட்டுகளிலும் சிறந்து விளங்குகின்றார்கள். இந்த விளையாட்டு மைதானம், கிராமப் பகுதியில், இயற்கை சூழ்ந்த, காற்றோட்டமுள்ள பகுதியில் அமைந்துள்ளது. இங்கு நடக்கும் போட்டிகளில் நமது மாவட்ட இளைஞர்களும், அருகாமையில் உள்ள மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களும் பங்குபெற்று நம்முடைய கிரிக்கெட் மைதானத்தை நல்ல முறையில் பயன்படுத்தி, உலகளவில் பிரசித்தி பெறவேண்டும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
விழாவில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் நிர்வாகி ராமசாமி நன்றி கூறினார்.

Related Tags :
Next Story