மாவட்டத்தில் 4 ஒன்றியங்கள், 87 ஊராட்சிகளில் ஊரக புத்தாக்க திட்டம் கலெக்டர் மெகராஜ் தகவல்


மாவட்டத்தில் 4 ஒன்றியங்கள், 87 ஊராட்சிகளில் ஊரக புத்தாக்க திட்டம் கலெக்டர் மெகராஜ் தகவல்
x
தினத்தந்தி 9 Feb 2020 11:00 PM GMT (Updated: 9 Feb 2020 9:08 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 87 கிராம ஊராட்சிகளில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கலெக்டர் மெகராஜ் தெரிவித்தார்.

நாமக்கல்,

நாமக்கல்லில் உள்ள கோஸ்டல் ரெசிடென்சி ஓட்டலில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் சார்பில் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான திட்ட விளக்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். இதில் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நடந்த கூட்டத்தில் கலெக்டர் மெகராஜ் பேசியதாவது:- தமிழகத்தில் உள்ள 26 மாவட்டங்கள், 120 வட்டாரங்கள் மற்றும் 3,994 கிராம ஊராட்சிகளில் 2 கட்டமாக தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம், மோகனூர், புதுச்சத்திரம், திருச்செங்கோடு உள்ளிட்ட 4 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 87 கிராம ஊராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

பகுப்பாய்வு அறிக்கை

ஊரக தொழில் முனைவோரை உருவாக்குவது, அவர்களுக்கு தேவையான நிதி மற்றும் சேவைகளுக்கு வழிவகுப்பது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது ஆகியவை தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் நோக்கமாக உள்ளது. அதற்கான மாவட்ட பகுப்பாய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது. மேலும் மக்களின் பங்களிப்போடு வளர்ச்சி திட்டம் தயாரிப்பதற்கான குழு, ஊராட்சி வாரியாக தேர்வு செய்யப்பட்டு அவற்றிற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட அணியினர் தொழில்முனைவோர்கள், உற்பத்தியாளர்கள், இளைஞர்கள் மற்றும் சமூகம் சார்ந்த அமைப்புகளிடம் இருந்து தகவல்களை சேகரிக்க உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சாந்தி, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தில் மாவட்ட செயல் அலுவலர்கள் தாமோதரன், சுரே‌‌ஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், சரவணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story