திருவாரூர் அருகே அலிவலத்தில் ஓ.என்.ஜி.சி. புதிய எண்ணெய் கிணறு அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு


திருவாரூர் அருகே அலிவலத்தில் ஓ.என்.ஜி.சி. புதிய எண்ணெய் கிணறு அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 10 Feb 2020 11:30 PM GMT (Updated: 10 Feb 2020 6:38 PM GMT)

திருவாரூர் அருகே அலிவலத்தில் ஓ.என்.ஜி.சி. புதிய எண்ணெய் கிணறு அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதனால் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு விவசாயம் அழிந்து வருகிறது. எனவே விவசாயத்தை பாதிக்கும் ஒ.என்.ஜி.சி. நிறுவனம் டெல்டா மாவட்டங்களை விட்டு வெளியேற வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருவாரூர் அருகே அலிவலம் கிராமத்தில் நடராஜன், அமிர்தகவி ஆகிய 2 விவசாயிகள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னதாக தங்களுடைய 3 ஏக்கர் விவசாய நிலத்தை ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு கச்சா எண்ணெய் எடுப்பதற்காக குத்தகைக்கு விட்டுள்ளனர். இதனையடுத்து அந்த இடத்தில் 2 கிணறுகள் அமைத்து ஓ.என்.ஜி.சி. நிறுவனமானது கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது

விவசாயிகள் எதிர்ப்பு

இந்த நிலையில் அதே இடத்தில் புதியதாக மூன்றாவது எண்ணெய் கிணறு அமைக்கும் பணியை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தற்போது தொடங்கியுள்ளது. இதற்கு நிலத்தின் உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நில உரிமை யாளர்கள் மற்றும் விவசாயிகள் கூறும்போது, விவசாய நிலத்தில் கச்சா எண்ணெய் எடுப்பதால் விவசாயமும், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே புதிய கிணறு அமைக்க கூடாது. எங்கள் நிலத்தை திருப்பி தர வேண்டும் என்றனர்.

மேலும் அவர்கள் கூறும்போது, இதுகுறித்து ஒ.என்.ஜி.சி. அதிகாரிகளிடம் கேட்டதற்கு உரிய பதில் அளிக்க மறுப்பதாகவும், தற்போது காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது எண்ணெய ்கிணற்றில் கச்சா எண்ணெய் எடுக்கிறார்களா அல்லது ஹைட்ரோகார்பன் எடுக்கிறார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

உயர் அதிகாரிகள்

இதுகுறித்து ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளிடம் கேட்டதற்கு விவசாயிகளின் நிலத்தில் கச்சா எண்ணெய் கிணறு அமைக்க ஏற்கனவே அவர்களிடம் உரிய தொகை கொடுத்து அனுமதி பெற்று உள்ளோம். தற்போது புதிய எண்ணெய் கிணறு அமைக்கும் பணியை நிறுத்துவது குறித்து உயர் அதிகாரிகள் தான் முடிவு எடுப்பார்கள் என தெரிவித்தனர்.

Next Story