ஈரோட்டில், தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை


ஈரோட்டில், தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 13 Feb 2020 4:00 AM IST (Updated: 13 Feb 2020 5:57 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

ஈரோடு,

ஈரோடு மூலப்பட்டறை நால்ரோடு பகுதியில் ஆண்டவர் லேத் ஒர்க்ஸ் என்ற பெயரில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி மற்றும் அவரது தம்பி சண்முகம் ஆகியோர் நடத்தி வருகிறார்கள். இந்த நிறுவனத்தில் ஆயில் மில்களுக்கு தேவையான அரவை எந்திரங்கள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியா மட்டும் அல்லாமல் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும், இந்த நிறுவனத்தின் எந்திரங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இந்த நிறுவனத்திற்கு ஈரோடு மூலப்பட்டறையில் தலைமை அலுவலகமும், அதன் கிளை அலுவலகம் சோலார் மற்றும் அசோகபுரம் பகுதியிலும் செயல்பட்டு வருகிறது. ஆண்டவர் லேத் ஒர்க்ஸ் நிறுவனத்தில் தொழிலாளர்கள் பலர் வேலை செய்து வருகின்றார்கள்.

இந்தநிலையில் நேற்று காலை 10 மணி அளவில் ஈரோடு மூலப்பட்டறையில் உள்ள நிறுவனம், சோலார், அசோகபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள அலுவலகங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

ஈரோட்டை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 20 பேர் 3 குழுக்களாக பிரிந்து இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெளி ஆட்கள் உள்ளே செல்ல முடியாதபடியும், நிறுவனத்தின் உள்ளே இருந்தவர்கள் வெளியில் வரமுடியாத படியும் நிறுவனத்தின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

சரக்கு மற்றும் சேவை வரி தாக்கல் செய்ததில் மோசடி உள்ளதா? வருமான வரி முறையாக தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறதா? என்பது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் கிடைத்தன.

இதுதொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தனவா? என்பது பற்றி எந்த கருத்தையும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக தெரிகிறது. நேற்று இரவு வரை தொடர்ந்து சோதனை நடந்து வந்தது. சோதனை முடிந்த பிறகே உண்மை நிலவரம் தெரியவரும்.

Next Story