ஸ்ரீவைகுண்டத்தில் வருகிற 29-ந்தேதி ஜல்லிக்கட்டு போட்டி - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி


ஸ்ரீவைகுண்டத்தில் வருகிற 29-ந்தேதி ஜல்லிக்கட்டு போட்டி - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 13 Feb 2020 11:00 PM GMT (Updated: 13 Feb 2020 7:26 PM GMT)

ஸ்ரீவைகுண்டத்தில் வருகிற 29-ந்தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். இதுகுறித்து அவர் நேற்று தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவில்பட்டி, 

காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடச்செய்து, காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியவர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. இதையடுத்து விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவில், அவருக்கு ‘பொன்னியின் செல்வி‘ என்ற பட்டத்தை சூட்டினர்.

அதேபோன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயி என்பதால்தான் காவிரி டெல்டா பகுதியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து, தமிழக வரலாற்றில் புதிய அத்தியாயத்தை படைத்து சாதனை புரிந்துள்ளார். காவிரியை ஜெயலலிதா மீட்டது போன்று, காவிரி டெல்டா பகுதி மண்ணை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீட்டு தந்துள்ளார். காவிரி டெல்டா பகுதியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக்க மத்திய அரசின் ஒப்புதலை பெற முயற்சி செய்து வருகிறார். ஹைட்ரோ கார்பன், நியுட்ரினோ போன்ற திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நெடுவாசல் பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அந்த பகுதியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்ததால், இனி அந்த பிரச்சினைக்கு தமிழகத்தில் இடம் இல்லை. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழா வருகிற 22-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார். மேலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும், நிறைவேற்றப்பட்ட பணிகளுக்கு தொடக்க விழாவும் நடத்தப்படுகிறது. மேலும் பல்வேறு புதிய அறிவிப்புகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுகிறார்.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழாவை, தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரையிலும் நடந்த விழாக்களிலேயே சிறப்பான விழாவாக நடத்துவதற்கு அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.

தூத்துக்குடியில் தொழில் வளம் பெருக வேண்டும் என்பதற்காக ரூ.49 ஆயிரம் கோடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை தொடங்கப்பட உள்ளது. இதன்மூலம் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஜல்லிக்கட்டு போட்டியை மீட்டெடுத்த பெருமை அ.தி.மு.க. அரசையே சாரும். தமிழகத்தில் அலங்காநல்லூர், பாலமேடு போன்ற பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றாலும், தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்முறையாக ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று, ஸ்ரீவைகுண்டத்தில் வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கில் அய்யப்பனை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீஸ் விசாரணை நடைபெற்று வருவதால், அதுகுறித்த மேலும் தகவல்களை கூறுவது சரியாக இருக்காது. கைதான அய்யப்பன், தனது உதவியாளரா? இல்லையா? என்பதை முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவுதான் கூற வேண்டும். இந்த முறைகேட்டில் யார் யாரெல்லாம், எந்தளவுக்கு சம்பந்தப்பட்டு உள்ளார்கள் என்பது விசாரணை முடிவில்தான் தெரியவரும்.

சினிமாவில் வரும் காட்சிகளை தணிக்கை செய்வதற்கு மத்திய அரசின் தணிக்கை துறை உள்ளது. தணிக்கை துறையினர் திரைப்படத்தை பார்த்து அனுமதி சான்றிதழ் வழங்கிய பின்னரே திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. எனவே திரைப்படங்களில் ஆட்சேபகரமான கருத்துகள் இருப்பதாக புகார் எழுந்தால், மத்திய அரசின் தணிக்கை துறைதான் அதனை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story