மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: தரையில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம்
அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நெல்லை கொட்டி போராட்டம் நடத்தினர்.
நெல்லை,
நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
வீரவநல்லூரை சேர்ந்த விவசாயிகள், கன்னடியன் கால்வாய் நீர்பாசன குழு முன்னாள் நிர்வாகி பெருமாள் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாசல் முன்பு மூட்டையில் இருந்த நெல்லை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
எங்கள் பகுதி விவசாயம் நிறைந்த பகுதி ஆகும். இங்கு வீரவநல்லூர் பகுதி-1 வருவாய் கிராமத்தில் 270 ஏக்கர், பகுதி-2ல் 1,000 ஏக்கர் மற்றும் அருகில் உள்ள கிரியம்மாள்புரத்தில் 634 ஏக்கர், உதயமார்த்தாண்டபுரத்தில் 88 ஏக்கர், தெற்கு அரியநாயகிபுரத்தில் 284 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இங்கு தற்போது நெல் விளைச்சல் அடைந்து அறுவடை பணி தொடங்கப்பட்டுள்ளது.
எங்கள் பகுதி விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்கு ஊரின் மையப்பகுதியில் உள்ள பூமிநாத சுவாமி கோவிலையொட்டி 1 ஏக்கர் காலி இடத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் குறைவான நெல் விளைச்சல் நடக்கும் தனியார் இடத்தில் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. எனவே அனைத்து விவசாயிகளும் பயன் அடையும் வகையில், பூமிநாத சுவாமி கோவிலையொட்டி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமையில், புரட்சி பாரதம் மாவட்ட செயலாளர் நெல்சன், மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் உள்ளிட்டோர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘‘நாங்குநேரி தாலுகா மாவடியை சேர்ந்த சமூக ஆர்வலர் பிராங்கிளின் மீது கடந்த 1-ந் தேதி திருக்குறுங்குடி போலீசார் 5 பேர் சேர்ந்து அடித்து, இழுத்துச்சென்று போலீஸ் நிலையத்தில் வைத்து தாக்கி உள்ளனர். இதற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறிஉள்ளனர்.
பாளையங்கோட்டை மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் முருகேசன், செயலாளர் அய்யப்பன், பொருளாளர் நாராயண பெருமாள் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர்.
அவர்கள் கொடுத்த மனுவில், ‘‘பாளையங்கோட்டை பகுதியில் 300-க்கும் மேற்பட்ட லாரிகள் எங்கள் சங்க உறுப்பினர்களால் இயக்கப்பட்டு வருகிறது. எங்களது லாரிகளில் மணலுக்கு மாற்றாக எம்.சாண்ட் மற்றும் ஜல்லி, சரள் மண், குண்டுக்கல், செங்கல் போன்ற கட்டிட பொருட்களையும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்து வருகிறோம். இந்த பொருட்களை கிரஷர் உரிமையாளர்களிடம் இருந்து விலைக்கு வாங்கி அதனை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறோம். இந்த நிலையில் கனிம வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் லாரிகளை தணிக்கை செய்கிறோம் என்று கூறி நீண்ட நேரம் நிறுத்தி வைத்து சிரமப்படுத்துகின்றனர். எனவே இதனை முறைப்படுத்த லாரி தொழில் சிறப்பாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறிஉள்ளனர்.
இந்து மக்கள் கட்சி நெல்லை மாவட்ட தலைவர் உடையார் தலைமையில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘‘சேரன்மாதேவி அருகே உள்ள மேலப்புதுக்குடியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் திடீரென்று கல்லறை தோட்டம் அமைத்துள்ளனர். இதை கேட்ட போது எங்களை அச்சுறுத்துகின்றனர். எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறிஉள்ளனர்.
திருப்பணிகரிசல்குளம் மக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கரிசல் சுரேசுடன் வந்து கொடுத்த மனுவில், திருப்பணிகரிசல்குளம் பகுதியில் ஒரு சமுதாயத்துக்கு சொந்தமான நிலம் உள்ளது. அங்கு யூனியன் அதிகாரிகள் நில உரிமையாளர்களின் ஒப்புதல் இல்லாமல் செய்யும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்’’ என்று கூறிஉள்ளனர்.
சீவலப்பேரி அருகே மேட்டுப்பச்சேரியை சேர்ந்த பள்ளிக்கூட செயலாளர் கல்லத்தியான் தலைமையில் ஊர் மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பள்ளிக்கூட விளையாட்டு மைதானத்தில் அதிகாரிகள் 300 அடி ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ளனர். இது பள்ளிக்கு மிக அருகில் இருப்பதால் மாணவர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறிஉள்ளனர்.
மக்கள் மனதின் குரல் அமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஜெபராஜ் பால் கொடுத்த மனுவில், ‘‘பாளையங்கோட்டையில் ஒருவழிப்பாதை நடைமுறையில் இருப்பதை கவனத்தில் கொள்ளாமல் அனைத்து ரோடுகளிலும் எதிரெதிரே வாகனங்கள் செல்கின்றனர். சாலை விதியை அமல்படுத்தாமல் போலீசாரும் உள்ளனர். எனவே ஒரு வழிப்பாதையை முறையாக அமல்படுத்த வேண்டும்’ என்று கூறிஉள்ளார்.
த.மு.மு.க. (ஹைதர் அலி அணி) நிர்வாகி டவுன் ஜாபர் தலைமையில், களக்காடு சிவசண்முகபுரத்தை சேர்ந்த அறக்கட்டளை நிர்வாகி ஜெயசித்ரா மற்றும் ஏராளமான பெண்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், ‘‘அறக்கட்டளை உறுப்பினர்கள் ரூ.3 ஆயிரம் செலுத்தினால் ரூ.6 லட்சம் கடன் வாங்கி தருவதாக நெல்லையை சேர்ந்த 2 பேர் கூறினர். அதை நம்பி 4 ஆயிரம் பேரிடம் ரூ.1.20 கோடி வசூலித்து கொடுத்தோம். ஆனால் குறிப்பிட்டபடி கடன் பெற்றுத்தரவில்லை, அதற்காக வாங்கிய பணத்தையும் திரும்ப தரவில்லை. எனவே மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு உள்ளது. இதேபோல் பல்வேறு தரப்பினர் கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
தொடர்ந்து கலெக்டர் ஷில்பா பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் வீடு கட்டுவதற்கான பணி ஆணையை 63 பேருக்கு கலெக்டர் ஷில்பா வழங்கினார். நெல்லை தாலுகாவை சேர்ந்த 29 பேருக்கு இலவச பட்டாக்களையும், பாளையங்கோட்டையை சேர்ந்த 18 பேருக்கு ஆக்கிரமிப்பு வரன்முறை பட்டாக்களையும் கலெக்டர் வழங்கினார்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 3 பேருக்கு இஸ்திரி பெட்டிகள், 8 பேருக்கு இலவச தையல் எந்திரங்களும் வழங்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் 25 குழந்தைகளுக்கு கைக்கெடிகாரம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சமூக நலத்துறை சார்பில் 5 திருநங்கைகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான அதிநவீன தையல் எந்திரங்களையும் வழங்கினார். இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 561 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்க அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை உதவி கலெக்டர் மணீஷ் நாரணவரே, சமூக பாதுகாப்பு திட்ட தனி உதவி கலெக்டர் சசிரேகா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story