கரும்பு நிலுவைத்தொகையை வழங்கக்கோரி, ஆப்பக்கூடல் சர்க்கரை ஆலையை விவசாயிகள் முற்றுகை - 50 பேர் கைது


கரும்பு நிலுவைத்தொகையை வழங்கக்கோரி, ஆப்பக்கூடல் சர்க்கரை ஆலையை விவசாயிகள் முற்றுகை  - 50 பேர் கைது
x
தினத்தந்தி 17 Feb 2020 10:45 PM GMT (Updated: 17 Feb 2020 11:34 PM GMT)

கரும்பு நிலுவைத்தொைகயை வழங்கக்கோரி ஆப்பக்கூடல் சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

அந்தியூர், 

அந்தியூர் அருகே ஆப்பக்கூடலில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை முன்பு நேற்று பகல் 11 மணி அளவில் விவசாயிகள் ஏராளமானோர் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் ஆலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கடந்த 6 மாதமாக கரும்பு நிலுவை தொகை விவசாயிகளுக்கு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே உடனே நிலுைவத்தொகையை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் கோரிக்கையை உடனே நிறைவேற்றக்கோரி கோஷமும் எழுப்பினார்கள்.

இந்த போராட்டத்துக்கு கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன் மற்றும் ஈரோடு, கோபி, அந்தியூர், பவானி, கூகலூர், காசிபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டார்கள்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஆப்பக்கூடல் போலீசார் அங்கு சென்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக விவசாயிகள் 50 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

Next Story