ஈஷா யோகா மைய சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 21-ந் தேதி கோவை வருகை
கோவையை அடுத்த ஈஷா யோகா மையத்தில் வருகிற 21-ந் தேதி நடக்கும் சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வருகிறார்.
துணை ஜனாதிபதி வருகை
கோவையை அடுத்த ஈஷா யோகா மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சிவராத்திரி விழா வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அன்று இரவில் தொடங்கும் சிவராத்திரி விழா மறுநாள் காலை வரை விடிய விடிய நடக்கிறது. ஆடல், பாடல், நடனம் மற்றும் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் நடக்கும் இந்த விழாவில் ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கிவாசுதேவ் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மேலும் இந்த சிவராத்திரி விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் அன்று காலை 9 மணியளவில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு 12 மணியளவில் கோவை வருகிறார். அதன்பின்னர் அவர் கார் அல்லது ஹெலிகாப்டர் மூலம் ஈஷா யோகா மையம் செல்கிறார். அங்கு அன்று இரவு நடக்கும் சிவராத்திரி விழாவில் துணை ஜனாதிபதி கலந்து கொள்கிறார்.
கோவையில் தங்குகிறார்
அதன்பின்னர் இரவில் கார் மூலம் கோவை திரும்பி ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். மறுநாள் காலை 8 மணியளவில் விமானம் மூலம் கோவையில் இருந்து புறப்பட்டு ஐதராபாத் செல்கிறார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கோவையில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. துணை ஜனாதிபதி கோவை வரும் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பலத்த பாதுகாப்பு
இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் அதிகாரி கூறியதாவது:-
துணை ஜனாதிபதி கோவை வருகையையொட்டி மத்திய ரிசர்வ் போலீசார், உள்ளூர் போலீசார், மத்திய அதிவிரைவு படை போலீசார், புறநகர் போலீசார் ஆகியோர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். துணை ஜனாதிபதி விமானம் மூலம் கோவை வந்ததும் பெரும்பாலும் ஹெலிகாப்டர் மூலம் தான் ஈஷா யோகா மையம் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர் அன்று இரவு அல்லது மறுநாள் அதிகாலை கார் மூலம் தான் கோவை திரும்பி வர முடியும். இதற்காக கோவையிலிருந்து ஈஷா யோகா மையம் செல்லும் சிறுவாணி சாலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
இதே போல அவர் தங்கும் ரேஸ்கோர்ஸ் அரசினர் விருந்தினர் மாளிகை, கோவையில் இருந்து கார் மூலம் விமான நிலையம் செல்லும் அவினாசி சாலையிலும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story