சேலத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.2¼ கோடி மோசடி 3 பேர் கைது


சேலத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.2¼ கோடி மோசடி 3 பேர் கைது
x
தினத்தந்தி 19 Feb 2020 12:30 AM GMT (Updated: 18 Feb 2020 7:26 PM GMT)

சேலத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.2¼ கோடி மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

சேலம் 5 ரோடு ராம்பகதூர் தெருவில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான டவரில் ‘டி.என்.ஏ. என்டர் பிரைசஸ்’ என்ற நிதிநிறுவனத்தை சேலத்தை சேர்ந்த தினகரன் (வயது 29), கந்தகுமார் மற்றும் சிலர் சேர்ந்து நடத்தி வந்தனர். இந்த நிதிநிறுவனத்தில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டனர். இதையடுத்து இந்த நிதி நிறுவனத்தில் சேலத்தை சேர்ந்த பலர் முதலீடு செய்தனர்.

இந்தநிலையில் சேலம் மெய்யனூர் தாயன்காடு பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவர் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், ‘டி.என்.ஏ. என்டர் பிரைசஸ்’ நிதி நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.40 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்தனர். இதை நம்பி நான் மற்றும் எனது நண்பர்கள் பலர் அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தோம்.

ஆனால் அவர்கள் எங்களுக்கு பணம் தராமல் ஏமாற்றி வருகின்றனர். இந்த நிதி நிறுவனத்தினர் என்னை போல பலரிடம் மொத்தம் ரூ.2¼ கோடி மோசடி செய்து உள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டு தர வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் நிதி நிறு வனத்தினர் மோசடி செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக தினகரன், கந்தகுமார் மற்றும் கோவிந்தராஜ் (34) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story