பாலக்கோடு அருகே என்ஜின் பழுதாகி எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நின்றது பயணிகள் கடும் அவதி


பாலக்கோடு அருகே என்ஜின் பழுதாகி எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நின்றது பயணிகள் கடும் அவதி
x
தினத்தந்தி 18 Feb 2020 11:45 PM GMT (Updated: 18 Feb 2020 7:42 PM GMT)

பாலக்கோடு அருகே என்ஜின் பழுதாகி எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நின்றதால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

பாலக்கோடு,

கோவையில் இருந்து மும்பைக்கு லோக்மான்ய திலக் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நேற்று காலை 8.30 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.

மதியம் 2.30 மணியளவில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள காடுசெடிப்பட்டியை கடந்தபோது ரெயில் என்ஜின் பகுதியில் உள்ள டீசல் பம்ப் பழுதாகி ரெயில் நடுவழியில் நின்றுவிட்டது.

பயணிகள் அவதி

இதுபற்றி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஓசூரில் இருந்து மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டது. அந்த என்ஜின் பொருத்தப்பட்டு ரெயில் அங்கிருந்து சுமார் 2 மணி நேரம் தாமதமாக மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு சென்றது.

என்ஜின் பழுதாகி நடுவழியில் ரெயில் நின்றதால் பயணிகள் கடும் அவதிப் பட்டனர்.

Next Story