இரட்டை கொலை வழக்கில் தலைமறைவான ஓசூர் தொழில் அதிபரை பிடிக்க போலீசார் ஐதராபாத் விரைந்தனர்


இரட்டை கொலை வழக்கில் தலைமறைவான ஓசூர் தொழில் அதிபரை பிடிக்க போலீசார் ஐதராபாத் விரைந்தனர்
x
தினத்தந்தி 19 Feb 2020 5:00 AM IST (Updated: 19 Feb 2020 1:17 AM IST)
t-max-icont-min-icon

இரட்டை கொலை வழக்கில் தலை மறைவான ஓசூர் தொழில் அதிபரை பிடிக்க போலீசார் ஐதராபாத் விரைந்துள்ளனர்.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஆனந்தபாபு. இவரது மனைவி நீலிமா (வயது42). இவர்கள் 2 பேரும் தொழில் அதிபர்கள். கடந்த நவம்பர் மாதம் 11-ந் தேதி உத்தனப்பள்ளி அருகே உள்ள தனது நிறுவனத்திற்கு நீலிமா சென்று விட்டு காரில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். சானமாவு அருகே வந்த போது எதிரே லாரியில் வந்த கூலிப்படையினர் கார் மீது லாரியை மோத விட்டனர்.

பின்னர் காரின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். இதில் காரில் சென்ற பெண் தொழில் அதிபர் நீலிமா, அவரது டிரைவர் கெலமங்கலம் எச்.செட்டிப்பள்ளி முரளி (25) ஆகிய 2 பேரும் கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டை கொலை தொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

13 பேர் கைது

இதில் ஆனந்தபாபுவின் அக்கா கணவரான ஓசூர் வெங்கடேஸ்வரா லேஅவுட் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஜே.ஆர். என்கிற ராமமூர்த்தி (64) என்பவர், தொழில் போட்டி காரணமாக மதுரையைச் சேர்ந்த கூலிப்படை உதவியுடன் ஆனந்தபாபு அவரது மனைவி நீலிமா ஆகியோரை கொலை செய்ய திட்டம் போட்டதும், ஆனந்தபாபு நிறுவனத்திலேயே இருந்ததால் அவரது மனைவியும், கார் டிரைவரும் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

இந்த கொலை தொடர்பாக மதுரையைச் சேர்ந்த வக்கீல் வெங்கட்ராமன் உள்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் மஞ்சுநாத், ஆனந்த், ராமு, கோபால், வக்கீல் வெங்கட்ராமன், அசோக், ராமகிருஷ்ணன், முருகன் என்கிற முருகப்பா ஆகிய 8 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை நடந்த நாள் முதல் தொழில் அதிபர் ராமமூர்த்தி தலைமறைவாக உள்ளார்.

தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

கடந்த 3 மாதங்களாக அவரை போலீசார் பல இடங்களில் தேடி வருகிறார்கள். ஆனாலும் அவர் இதுவரை போலீசாரிடம் சிக்கவில்லை. அவரது வங்கி கணக்குகளை முடக்கி உள்ளனர். தற்போது ஐதராபாத்தில் ஜே.ஆர். என்கிற ராமமூர்த்தி பதுங்கி உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு போலீசார் விரைந்துள்ளனர்.

தற்போது தமிழ்நாடு காவல் துறை மூலம் இந்த இரட்டை கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக தொழில் அதிபர் ராமமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது படத்துடன் நோட்டீஸ் அச்சிடப்பட்டு அனைத்து போலீஸ் நிலையங்களிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.

ரகசியம் காக்கப்படும்

தொழில் அதிபர் ஜே.ஆர். என்கிற ராமமூர்த்தி பற்றிய தகவல் கிடைத்தால் போலீசாருக்கு தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் பெயர் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story