தமிழக மீனவர்களின் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை நாகையில் முத்தரசன் பேச்சு


தமிழக மீனவர்களின் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை நாகையில் முத்தரசன் பேச்சு
x
தினத்தந்தி 20 Feb 2020 12:00 AM GMT (Updated: 19 Feb 2020 5:47 PM GMT)

தமிழக மீனவர்களின் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்று முத்தரசன் கூறினார்.

நாகப்பட்டினம்,

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. மீனவ தொழிலாளர் சங்கம் சார்பில் மீனவர்களின் வாழ்வுரிமைக்கான கடலோர பிரசார பயணம் கடந்த 15–ந் தேதி கன்னியாகுமரி, திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஆகிய 2 இடங்களில் இருந்து தொடங்கியது. பிரசார பயணத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர்கள் மணி ஆச்சாரி, ராதாகிருஷ்ணன் தலைமையில் 9 பேர் 2 குழுக்களாக பிரிந்து தமிழக கடலோர மாவட்டங்களில் மீனவர்களை சந்தித்து பிரசாரம் மேற்கொண்டனர். இந்த பிரசார குழு நேற்று மாலை நாகையை வந்தடைந்தது.

அதை தொடர்ந்து கடலோர பிரசார பயண நிறைவு பொதுக்கூட்டம் நாகை அவுரித்திடலில் நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. மீனவ தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் சின்னதம்பி தலைமை தாங்கினார். நாகை மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. செயலாளர் ராமன் வரவேற்றார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி நாகை மாவட்ட செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். இதில் செல்வராசு எம்.பி., ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச் செயலாளர் மூர்த்தி, மீனவ தொழிலாளர் சங்க மாநில தலைவர் முருகானந்தம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சரபோஜி உள்பட பலர் பேசினர்.

மீனவர்களின் நலனில் அக்கறை இல்லை

கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

கடல் யாருக்கும் சொந்தமானது இல்லை. கடல் வாழ் உயிரினங்களை எந்த அரசும் உருவாக்கவில்லை. அது இயற்கையாக உருவானது. இயற்கையை நம்பி வாழ்க்கை நடத்துபவர்கள் மீனவர்கள். மற்ற தொழிலாளர்களிடம் இருந்து வேறுபட்டு நிற்பவர்கள் மீனவர்கள். ஆனால் அவர்களின் உயிருக்கும், உடமைக்கும், தொழிலுக்கும் பாதுகாப்பு இல்லை.

தமிழக மீனவர்களின் உடமைகளை இலங்கை ராணுவம் பறித்து கொள்கிறது. தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் தாக்கும் போது அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உள்ளது. ஆனால் மத்திய அரசு தமிழக மீனவர்களின் நலனில் அக்கறை இல்லாமல் இருக்கிறது.

தமிழர்களுக்கு எதிரானவர்கள்

தொடர்ந்து இன்று வரை தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்பட்டு வருகின்றனர். இலங்கை அதிகளுக்கு குடியுரிமை இல்லை என்று மத்திய அரசு கூறுகிறது. தமிழக மீனவர்களுக்கு மீன் பிடிக்க உரிமை இல்லை என்று இலங்கை அரசு கூறுகிறது. அந்த வகையில் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திரமோடியும், இலங்கை நாட்டு பிரதமர் ராஜபக்சேவும் தமிழர்களுக்கு எதிரானவர்கள். மத்திய அரசின் தவறான கொள்கையால் தொழில்கள் பாதிக்கப்பட்டு தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகிறது.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. ஆனால் மோடி எத்தகைய போராட்டம் நடந்தாலும் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற மாட்டேன் என்று கூறுகிறார். நமது நாட்டின் பிரதமர் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்டவர். ஆனால் அவர் சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார். தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளார். அதற்கு நாங்கள் நன்றி தெரிவித்து உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார். முடிவில் கனரக வாகன ஓட்டுனர் சங்க பாஸ்கரன் நன்றி கூறினார்.


Next Story