குவிண்டாலுக்கு ரூ.3,500 விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை: நெல்லை தரையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


குவிண்டாலுக்கு ரூ.3,500 விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை: நெல்லை தரையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Feb 2020 12:15 AM GMT (Updated: 19 Feb 2020 7:48 PM GMT)

ஒரு குவிண்டாலுக்கு ரூ.3,500 விலை நிர்ணயம் செய்யக்கோரி விவசாயிகள் நெல்லை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம்,

கும்பகோணம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கும்பகோணம் உதவி கலெக்டர் வீராச்சாமி தலைமை தாங்கினார். தாசில்தார் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வேளாண்மை துறை, மின்வாரியத்துறை, வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு வந்த விவசாயிகள் முறையாக அறிவிப்பு செய்யாமல் கூட்டம் நடத்துவதை கண்டித்தும், உரிய நேரத்துக்கு வராத உதவி கலெக்டரை கண்டித்தும், நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 விலை நிர்ணயம் செய்யக் கோரியும் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து உதவி கலெக்டர் அலுவலக வாசலில் கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் விமல்நாதன் பேசிய தாவது:-

பாராட்டு

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இதுபோன்ற நல்ல அறிவிப்புகளை அவர் அறிவிப்பார் என நம்புகிறோம். அண்டை மாநிலமான கேரளா நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,795 விலை நிர்ணயம் செய்துள்ளது. இதுபோன்ற விவசாயிகள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை எடுக்கும் முதல்-அமைச்சர்களை ஊக்குவிக்க வேண்டும். தற்போது கும்பகோணம் பகுதியில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையங்கள் போதுமானதாக இல்லை. நெல் சாகுபடி பரப்பளவு அதிகமானதற்கு ஏற்றவாறு கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாரக்கணக்கில் காத்திருப்பு

போதுமான எண்ணிக்கையில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத காரணத்தால் நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் ந‌‌ஷ்டம் ஏற்படுகிறது. இதுகுறித்து அமைச்சர்கள் கலந்து கொண்ட முத்தரப்பு கூட்டத்தில் கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. கொள்முதல் பணிகளில் உள்ள முறைகேடுகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story