தலைவாசல் அருகே பிளஸ்-2 மாணவி கடத்தல் பட்டதாரி கைது


தலைவாசல் அருகே பிளஸ்-2 மாணவி கடத்தல் பட்டதாரி கைது
x
தினத்தந்தி 20 Feb 2020 4:08 AM IST (Updated: 20 Feb 2020 4:08 AM IST)
t-max-icont-min-icon

தலைவாசல் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்தியதாக பட்ட தாரியை போலீசார் கைது செய்தனர்.

தலைவாசல்,

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த மாணவி கடந்த 17-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் அந்த மாணவியை பெரியேரி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மகன் முகிலன் (வயது 30) என்பவர் கடத்தி சென்று விட்டதாக அந்த மாணவியின் தந்தை தலைவாசல் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் அந்த மாணவி தலைவாசல் அருகே சுங்கச்சாவடி பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் மற்றும் போலீசார் அந்த மாணவியை மீட்டனர். பின்னர் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

பட்டதாரி கைது

விசாரணையில், மாணவியை முகிலன் கடத்திச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து முகிலனை போலீசார் தேடி வந்தனர். நேற்று மதியம் 1 மணியளவில் தலைவாசல் வி.கூட்டுரோடு அருகில் முகிலனை போலீசார் மடக்கி பிடித்தனர். போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட மாணவி தனது பெற்றோருடன் செல்ல மறுத்ததால் அவரை சேலத்தில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

கைதான முகிலன் எம்.எஸ்சி., பி.எட். படித்த பட்டதாரி ஆவார். இவரது முதல் மனைவி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். பின்னர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு முகிலன் தலைவாசல் அருகே மணிவிழுந்தான் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

இந்தநிலையில் பட்டதாரி முகிலன் பிளஸ்-2 மாணவியை கடத்தியது அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Next Story