விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், ரூ.2¼ கோடியில் கட்டப்பட்ட குடோனை திறக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை


விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், ரூ.2¼ கோடியில் கட்டப்பட்ட குடோனை திறக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 21 Feb 2020 3:45 AM IST (Updated: 21 Feb 2020 1:23 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.2¼ கோடியில் கட்டப்பட்ட குடோனை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம்,

விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, செஞ்சி, அரகண்டநல்லூர், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் உள்ளிட்ட 18 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் உள்ளன. இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கும் மற்றும் விவசாயிகள் சிறிது நேரம் அமர்ந்து ஓய்வு எடுப்பதற்காகவும் போதிய இடவசதி இல்லை.

அந்த வகையில் மாவட்ட தலைநகரான விழுப்புரத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திலும் விளைபொருட்களை வைப்பதற்கு போதுமான இடவசதி இல்லை. இங்கு விழுப்புரத்தை சுற்றியுள்ள காணை, பெரும்பாக்கம், வேடம்பட்டு, பிடாகம், குச்சிப்பாளையம், கோலியனூர், வளவனூர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த விளைபொருட்களை அறுவடை செய்து அதனை மூட்டைகளாக கட்டிக்கொண்டு மாட்டு வண்டிகள், சரக்கு வாகனங்கள், டிராக்டர்களில் எடுத்து வருகின்றனர்.

இங்கு விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு வெளிமாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து விளைபொருட்களை கொள்முதல் செய்து செல்கின்றனர். இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.4 கோடி வரை வர்த்தகம் நடைபெறுகிறது.

இங்கு விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கு வசதியாக 8 குடோன்கள் உள்ளன. அந்த குடோன்கள் பழுதடைந்த நிலையில் இருப்பதால் ஒன்றிரண்டு குடோன்களில் மட்டுமே விளைபொருட்களை எடைபோட்டு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் கொண்டு வரும் விளைபொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கு போதிய இடவசதி இல்லாமல் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் கொளுத்தும் வெயிலில் அடுக்கி வைத்து அதன் அருகிலேயே அவர்களும் பல மணி நேரம் காத்துக்கிடக்கின்றனர்.

எனவே விவசாயிகளின் சிரமத்தை போக்கிடும் வகையிலும், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை விரிவாக்கம் செய்யும் வகையிலும் ஏற்கனவே இருந்த பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிதாக ரூ.2 கோடியே 20 லட்சம் மதிப்பில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவில் பெரிய அளவிலான குடோன் கட்டப்பட்டது. இந்த குடோன் கட்டி முடிக்கப்பட்டு 3 மாதங்களுக்கு மேலாகியும் இதுநாள் வரையிலும் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. தற்போது சம்பா நெல் அறுவடை பணிகள் நடப்பதால் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு நெல் வரத்து அதிகம் உள்ளது. அதுபோல் உளுந்து வரத்தும் தற்போது அதிகமாக உள்ளது.

இந்த சூழலில் புதியதாக கட்டப்பட்ட குடோன் திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பதால் விளைபொருட்களை பாதுகாப்பாக வைக்க முடியாமல் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் திறந்த வெளியிலேயே அடுக்கி வைத்துள்ளனர்.

இங்கு மூட்டைகளை எடை போடுவதற்கு ஊழியர்கள் பற்றாக்குறையும் உள்ளதால் பல மணி நேரம் விவசாயிகள், வெயிலில் காத்துக்கிடக்கும் நிலைமை உள்ளது.

எனவே இங்கு அதிகளவில் வரும் விவசாயிகளை சமாளிக்க கூடுதலாக பணியாளர்களை நியமிப்பதுடன் தேவையான அளவு மூட்டைகளை மாற்றுவதற்கும் பணியாட்களை நியமிப்பதோடு மட்டுமின்றி விளைபொருட்களை பாதுகாப்பாக வைத்து உடனுக்குடன் எடை போட்டு விற்பனை செய்வதற்காக கட்டப்பட்ட குடோனை திறக்க ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story