சமூக வலைதளங்களில் வைரலாகிறது: பள்ளி மாணவிகள் மதுஅருந்தும் வீடியோவால் பரபரப்பு பெற்றோர்கள் அதிர்ச்சி


சமூக வலைதளங்களில் வைரலாகிறது: பள்ளி மாணவிகள் மதுஅருந்தும் வீடியோவால் பரபரப்பு பெற்றோர்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 21 Feb 2020 12:30 AM GMT (Updated: 20 Feb 2020 8:15 PM GMT)

அரியலூரில் பள்ளி மாணவிகள் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

செந்துறை,

தமிழகத்தில் அன்றைய காலகட்டத்தில் ஆங்காங்கே தனியார் மதுபான கடைகள் இயங்கி வந்தன. ஏதாவது குறிப்பிட்ட சில கிராம பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்றது. அப்போது மது அருந்துபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்துவந்தது. மது விற்றவர்கள் மதுபானத்தை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்தனர். அதேபோன்று மது அருந்துபவர்களும் மறைந்து சென்று மதுகுடித்து வந்தனர்.

இந்த நிலையில் தனியார் வசமிருந்த மதுபானக்கடைகளை அரசு ஏற்று தமிழ்நாடு வாணிப நுகர்பொருள் கழகம் மூலம் மதுவை விற்பனை செய்து வருகிறது. மறைவான இடங்களில் விற்கப்பட்ட மதுபானங்கள் தற்போது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் முக்கிய சாலைகளிலும் விற்கப்படுகின்றன. இதனால் முன்பு மறைந்து சென்று மது குடித்தவர்கள் தற்போது எந்தவித தயக்கமுமின்றி மது வாங்கி சென்று பொது இடங்களிலேயே குடித்து வருகின்றனர்.

ைவரலாகும் வீடியோ

ஆண்கள் மட்டுமே மது அருந்திய, புகைபிடித்த காலம் போய் இன்று பெண்கள் பலரும், ஆண்களுக்கு இணையாக போதைக்கு அடிமையாகி வருகின்றனர். பெரும்பாலும் மேல்தட்டு மக்களிடம் மட்டும் சகஜமாக இருந்து வந்த இந்த பழக்கம், ஏழை-எளிய மக்களிடம் தொற்றிக்கொள்ளும் அபாயம் தற்போது அதிகரித்துள்ளது. இதற்கு பள்ளி மாணவ-மாணவிகள் மது குடிக்கும் வீடியோக்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் உலாவருவதை ஆதாரமாக கூறலாம். பள்ளி வகுப்பறையில் வைத்து மது குடிப்பது, புகை பிடிப்பது என மாணவிகளும் இவ்வித போதைக்கு அடிமையாகும் நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்ந்தேறி வருகிறது.

இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியை சேர்ந்த மாணவிகள் சிலர் மது வாங்கிக்கொண்டு காட்டுப் பகுதிக்கு சென்று அதனை 3 மாணவிகள் பகிர்ந்து குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை பார்த்த அந்த மாணவிகளின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதனை பார்க்கும் அனைவரும் மதுவால் மிகப்பெரிய கலாசார சீரழிவு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story