நாகூரில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதி நடவடிக்கை எடுக்க கோரிக்கை


நாகூரில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 21 Feb 2020 11:04 PM GMT (Updated: 21 Feb 2020 11:04 PM GMT)

நாகூரில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகூர்,

நாகையை அடுத்த நாகூரில் பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் நாகூர் பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படும். குறிப்பாக நாகூர்-நாகை மெயின்ரோட்டில் அரசு, தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன.

இந்த நிலையில் குஞ்சாலி மரைக்காயர் தெரு, கால் மாட்டு தெரு, கலிபாசாஹிப், தர்கா குளம், பெருமாள் வடக்கு வீதி, எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் அதிகளவில் நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர்.

மேலும் மனிதர்களை மட்டுமின்றி ஆடு, மாடு, கோழி, உள்ளிட்டவைகளை நாய்கள் கடித்து வருகிறது. மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை நாய்கள் விரட்டி செல்வதால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் சாலை நடுவே நாய்கள் படுத்து கொள்வதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாகூர் பகுதியில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story