கலெக்டர் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம்: ஓ.என்.ஜி.சி. தோண்டிய 4 கிணறுகளை மூடவேண்டும் - விவசாயிகள் கோரிக்கை


கலெக்டர் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம்: ஓ.என்.ஜி.சி. தோண்டிய 4 கிணறுகளை மூடவேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 22 Feb 2020 3:45 AM IST (Updated: 22 Feb 2020 6:16 AM IST)
t-max-icont-min-icon

ஓ.என்.ஜி.சி. தோண்டிய 4 கிணறுகளை மூடவேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

கடலூர்,

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அன்பு செல்வன் தலைமை தாங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், வேளாண்மை இணை இயக்குனர் முருகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) மாரியப்பன், உதவி இயக்குனர் பூவராகன், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் அரிகரன், முன்னோடி வங்கி மேலாளர் ஜோதிமணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரேணுகாம்பாள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் இளஞ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விவசாயிகள் கேட்ட கேள்விகளும், அதற்கு கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அளித்த பதில்களின் விவரம் வருமாறு:-

வேங்கடபதி (விவசாயி):- நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலையில் இருந்து வெளியே கொண்டு செல்லப்படும் கழிவுகளை அதன் ஒப்பந்ததாரர்கள் வயல்வெளியில் கொட்டி விட்டு செல்கிறார்கள். இதனால் விவசாய நிலங்கள் வீணாகி வருகிறது. விவசாயிகள் பெருமளவில் ந‌‌ஷ்டம் அடைகின்றனர். ஆகவே அந்த தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர்:- எந்த பகுதியில் இது போன்ற பிரச்சினை உள்ளது. இதற்கு யார் காரணம் என்பதை ஆலை நிர்வாகம் விளக்க வேண்டும்.

சர்க்கரை ஆலை அதிகாரி:- கழிவுகளை ஏற்றிச்சென்ற வாகனத்தின் டயர் பஞ்சரானதால் அங்குள்ள கால்வாயில் கழிவு நீரை கொட்டி விட்டார்கள். இது பற்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

கலெக்டர்:- கால்வாயில் கொட்ட உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. உங்களால் விவசாயிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே அவருக்கு உரிய இழப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும்.

சர்க்கரை ஆலை அதிகாரி:- பாதிக்கப்பட்ட விவசாயிக்கு இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாதவன் (விவசாயி):- காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க சிறப்பு வேளாண் மண்டலம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் தமிழக அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். அதேபோல் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களும் டெல்டா பகுதியில் வருமா? ரத்து செய்யப்பட்டு உள்ளதா? என்பதை விளக்க வேண்டும்.

கலெக்டர்:- தமிழக அரசு நல்ல அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான அறிக்கை இன்னும் நமக்கு வரவில்லை. அது வந்தவுடன் இது பற்றி விரிவாக விளக்கப்படும்.

ராமலிங்கம் (விவசாயி):- நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். போதிய இட வசதி இல்லாததால் நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வேளாண்மை இணை இயக்குனர்:- அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.

ரவீந்திரன் (விவசாயி):-காவிரி டெல்டா பகுதிகளை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். ஆனால் அந்த அறிவிப்பு சாகுபடி பணிகளில் விதைப்பு முதல் விற்பனை வரை அனைத்து உதவிகளுடன் கூடிய நிதி ஆதாரத்துடன் அரசு துணை நிற்கக்கூடிய வகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்படுமா? அல்லது வேளாண் விளை நிலங்கள் மாற்று பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதை தடை செய்யக்கூடிய வகையில் மட்டும் செயல்படுமா? என்பதை தமிழக அரசு விளக்கி அறிவிக்க வேண்டும்.

அதேபோல் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கடலூர் மாவட்டத்தில் 4 கிணறுகளை தோண்டி உள்ளது. இதனால் மிகப்பெரிய பாதிப்பு உருவாகும். எனவே செயல்பாட்டில் உள்ள கிணறுகளையும் மூட வேண்டும். இதற்காக தனி சட்டம் உருவாக்க வேண்டும்.(இதே கோரிக்கைகளை மற்ற விவசாயிகளும் முன் வைத்தனர்) நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மின்னணு தராசுகளை பயன்படுத்த வேண்டும்.

கலெக்டர்:- நான் ஏற்கனவே கூறியது போல் வேளாண் மண்டலம் குறித்து சட்டசபையில் மசோதா நிறைவேறி இருக்கிறது. அது பற்றி முழு விவரம் தெரியவில்லை. இருப்பினும் உங்களின் கருத்துகளும் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

வேல்முருகன் (விவசாயி):- காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். சேத்தியாத்தோப்பு குறுக்குரோட்டில் சாலையோரம் முட்செடிகள் அதிகமாக இருக்கிறது. இதை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரி:- நடவடிக்கை எடுக்கப்படும்.

குஞ்சிதபாதம் (விவசாயி):- கூடலையாத்தூரில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கானூர் வாய்க்கால்களை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுப்பணித்துறை அதிகாரி:- வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.

மதிவாணன் (விவசாயி):- சிதம்பரம் அருகே அத்திப்பட்டு கிராமத்தில் நிலத்தடி நீர் உப்பாக மாறி விட்டது. ஆகவே இங்கு தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுப்பணித்துறை அதிகாரி:- அகரநல்லூர், நந்திமங்கலம் ஆகிய இடங்களில் தடுப்பணை கட்டி முடித்தவுடன், அத்திப்பட்டிலும் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான திட்டம் தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முருகானந்தன் (விவசாயி):- ஸ்ரீமு‌‌ஷ்ணம் பகுதியை டெல்டா பகுதியாக அறிவிக்க வேண்டும். ஸ்ரீமு‌‌ஷ்ணம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் தரமான விதை இல்லை. இங்கு விதை வாங்கி நடவு செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

கலெக்டர்:- பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மணிகண்டன் (விவசாயி):- மக்காச்சோள தட்டையை எரிப்பதால் விளை நிலங்கள் பாதிக்கப்படுகிறது. ஆகவே அதை உரமாக மாற்ற விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

வேளாண்மை அதிகாரி:- மக்காச்சோள தட்டையை எரிக்காமல் உழவு செய்தால், அவை உரமாக மாறி விடும்.

செந்தாமரைக்கண்ணன் (விவசாயி):- கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளால் ஈச்சங்காடு பகுதியில் நிலத்தடி நீர் வீணாகி விட்டது. ஆகவே கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் பாதுகாப்பான தண்ணீர் வழங்க வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் விவாதங்கள் நடந்தது. இதில் பெரும்பாலான விவசாயிகள், காவிரி டெல்டா பகுதிகளை வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தனர். மேலும் அது குறித்து தெளிவான விளக்கத்தையும் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். கூட்டத்தில் மணி, காந்தி, நரசிம்மன் உள்பட பல்வேறு விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.

Next Story