இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மீனவருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்


இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மீனவருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 23 Feb 2020 5:00 AM IST (Updated: 23 Feb 2020 2:07 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மீனவருக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

பனைக்குளம்,

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 19-ந்தேதி சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் இரவு 9 மணி அளவில் தனுஷ்கோடிக்கும், கச்சத்தீவுக்கும் இடைப்பட்ட பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 6 குட்டி கப்பல்களில் ரோந்து வந்த 50-க்கும் மேற்பட்ட இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த கிங்ஸ்டன் என்பவருக்கு சொந்தமான படகின் வீல்ஹவுஸ் மீது துப்பாக்கி குண்டுகள் பட்டதில் அதில் இருந்த கண்ணாடி உடைந்து சிதறியது. அப்போது படகில் இருந்த மீனவர் சேசு அலங்காரம் (வயது 52) என்பவரது வலது கண்ணில் கண்ணாடி சிதறல்கள் பட்டு காயமடைந்தார். இதையடுத்து அவர் தற்போது மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நிவாரணம்

இந்த நிலையில் ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த சில நாட்களுக்கு முன்பு மீன்துறையினரின் அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்த சம்பவத்தின்போது காயமடைந்த மீனவர் சேசு அலங்காரத்திற்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர்.

இதனை முடிவுக்கு கொண்டு வர இந்திய வெளியுறவுத்துறை மற்றும் மீன் வளத்துறை அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இதுகுறித்து இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும்.

ராமேசுவரம் உள்பட தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தொல்லையில்லாமல் தொழில் செய்ய மத்திய, மாநில அரசுகள் வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story