சோலைமலை முருகன் கோவிலில் விடிய, விடிய பூஜை திரளான பக்தர்கள் தரிசனம்


சோலைமலை முருகன் கோவிலில் விடிய, விடிய பூஜை திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 22 Feb 2020 10:30 PM GMT (Updated: 22 Feb 2020 9:07 PM GMT)

சோலைமலை முருகன் கோவிலில் மகா சிவராத்திரியை யொட்டி விடிய,விடிய சிறப்பு பூஜை நடந்தது.

அழகர்கோவில்,

மதுரையை அடுத்த அழகர்கோவில் மலையில் உள்ள முருகப்பெருமானின் ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோவிலில் மகாசிவராத்திரியையொட்டி நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு தொடங்கிய பூஜை நேற்று அதிகாலை 4.30 மணி வரை நடந்தது. இதில் மூலவர் வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், பன்னீர், பஞ்சாமிர்தம், புஷ்பம், சந்தனம், விபூதி, தேன், இளநீர் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.

இந்த பூஜையில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி வேல்முருகன், கோவில் நிர்வாக அதிகாரி அனிதா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நெய் விளக்கேற்றி மூலவரையும், உற்சவரையும், ஆதிவேல் சன்னதியிலும், வித்தக விநாயகரையும் வணங்கி வழிபட்டனர்.

மேலும் அழகர்மலை உச்சியில் உள்ள பிரசித்திபெற்ற நூபுரகங்கை புனித தீர்த்தத்தில் காலையிலிருந்து மாலை வரை ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். அங்கு மேற்கு முகம் பார்த்து இருக்கும் ராக்காயி அம்மனை தரிசனம் செய்தனர். அவரவர் கொண்டு வந்த செம்பு குடங்களில் தீர்த்தங்களை எடுத்துசென்றனர்.

கள்ளழகர் கோவில்

அழகர்மலை அடிவாரத்திலுள்ள ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத கள்ளழகர் என்ற சுந்தரராஜபெருமாளுக்கும் சிறப்பு பூஜைகளும், உபசன்னதிகளிலும் பூஜைகளும் நடந்தது. இங்கும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கோவிலின் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவிலில் உள்ள ராஜகோபுர திரு நிலைக்கதவுகளுக்கு சந்தனமும், பூமாலைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். இதையொட்டி சுற்றுவட்டார கிராம பகுதிகளிலிருந்தும், வெளிமாவட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அந்தந்த சன்னதிகளில் விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.

சோழவந்தான்

சோழவந்தான் பிரளய நாதர் சிவன் கோவிலில் மகாசிவராத்திரி மற்றும் சிவ பிரதோஷ விழா நடைபெற் றது. சிவ பிரதோஷ விழாவை முன்னிட்டு சிவபெருமானுக்கும் நந்தி பெருமானுக்கு பால், தயிர் உள்பட திரவிய திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமியும் அம்மனும் ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தனர். விடிய, விடிய 4 முறை சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. ஏராளமானோர் விடிய, விடிய கோவிலை சுற்றி வந்தனர்.

தக்கார் சுசீலாராணி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவில், தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோவில், மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், பேட்டை அருணாசல ஈஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் மகாசிவராத்திரி விழா நடந்தது.

பேரையூர்

மகா சிவராத்திரியையொட்டி ஆயிரம் அடி உயரமுள்ள பேரையூர் மொட்டமலை மல்லிகார்ஜுனர் கோவிலில் விடிய,விடிய பூஜைகள் நடந்தது. கோவிலில் மல்லிகார்ஜுனர் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. 13 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 4 கால பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக மலை நடை பாதை முழுவதும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தது. இதேபோல் டி.கல்லுப்பட்டி தேவன்குறிச்சியில் உள்ள அக்கினீஸ்வரர் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தது. நள்ளிரவில் நடைபெற்ற பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

குலதெய்வ வழிபாடு

மேலும் அத்திப்பட்டி, சாப்டூர், சேடபட்டி, குன்னத்தூர், காரைக்கேணி, எம்.சுப்புலாபுரம் பகுதிகளில் உள்ள கிராம குலதெய்வ கோவில்களில் விடிய,விடிய வழிபாடு நடந்தது. தங்கள் குலதெய்வத்தை வழிபட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து அங்கேயே தங்கி வழிபட்டனர்.

Next Story