சூதாட்ட விடுதிகள் தொடங்க கவர்னர் கிரண்பெடி அனுமதி மறுப்பு மத்திய அரசுக்கு கோப்பினை அனுப்பினார்


சூதாட்ட விடுதிகள் தொடங்க கவர்னர் கிரண்பெடி அனுமதி மறுப்பு மத்திய அரசுக்கு கோப்பினை அனுப்பினார்
x
தினத்தந்தி 23 Feb 2020 5:56 AM IST (Updated: 23 Feb 2020 5:56 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் சூதாட்ட விடுதிகள் தொடங்க அனுமதி மறுத்துள்ள கவர்னர் கிரண்பெடி அதுதொடர்பாக முடிவெடுக்க கோப்பினை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளார்.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தின் வருமானத்தை பெருக்க கேசினோ எனப்படும் சூதாட்ட விடுதிகளை தொடங்க அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூர் சென்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் ஷாஜகான், பிப்டிக் தலைவர் சிவா எம்.எல்.ஏ. ஆகியோர் தொழிலதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

ஆனால் இந்த திட்டத்துக்கு புதுவையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆளும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கூட எதிர்ப்பு தெரிவித்தன. பல்வேறு சமூக அமைப்புகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

அரசு உறுதி

தனிநபர் பயனடையவே இந்த கேசினோ திட்டத்தை கொண்டுவருவதாக எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி கடுமையான குற்றச்சாட்டை கூறினார். இந்த திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று அ.தி.மு.க. சட்டமன்ற கொறடா வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. கவர்னர் கிரண்பெடியை சந்தித்து புகார் அளித்தார்.

இதற்கிடையே கேசினோ போன்ற திட்டங்களை புதுவை மக்கள் ஏற்கிறார்களா? என்று கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். இப்படியாக பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்த போதிலும் கேசினோ திட்டத்தை நிறைவேற்றுவது என்பதில் புதுவை அரசு உறுதியாக இருந்தது.

கவர்னருக்கு கோப்பு

இதுதொடர்பாக சமீபத்தில் பேட்டியளித்த காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் கூறும்போது, எந்த திட்டமாக இருந்தாலும் புதுவை மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நிறைவேற்றுவோம் என்று கூறினார்.

இத்தகைய சூழ்நிலையில் கேசினோ எனப்படும் சூதாட்ட விடுதிகள் தொடங்குவது தொடர்பாக புதுவை அரசு சார்பில் கவர்னருக்கு கோப்பு அனுப்பப்பட்டது.

அனுமதி மறுப்பு

ஆனால் இந்த கோப்பிற்கு கவர்னர் கிரண்பெடி அனுமதி அளிக்கவில்லை. சூதாட்ட விடுதிகள் தொடங்குவது தொடர்பாக தனக்கும், அமைச்சரவைக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதால் விதிப்படி அதுகுறித்து முடிவெடுக்கும் கோப்பினை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கவர்னர் கிரண்பெடி அனுப்பியுள்ளார்.

Next Story