சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு: சேலத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை


சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு: சேலத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 24 Feb 2020 5:00 AM IST (Updated: 24 Feb 2020 3:10 AM IST)
t-max-icont-min-icon

சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு தொடர்பாக சேலத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சேலம்,

நாடு முழுவதும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் உள்ள நபர்களை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கைது செய்து வருகின்றனர். மேலும் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் பலர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது அவர்கள் சோதனைகள் மேற்கொண்டு, பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்து வருகிறார்கள்.

கடந்த மாதம் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் பாதுகாப்பில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். இது குறித்து பயங்கரவாதிகள் தவுபிக் (வயது 27), அப்துல் சமீம்(29) மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த சிலரை போலீசார் கைது செய்தனர். மேலும் பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டு வாங்கி கொடுத்தது, உதவிகள் செய்தது போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

என்.ஐ.ஏ. அதிகாரிகள்

இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் கைதான பயங்கரவாதிகள் செல்போன் மூலம் யார்? யாரிடம் எல்லாம் பேசியுள்ளனர் என்பது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்காக நேற்று அதிகாலை கொச்சியில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சேலம் வந்தனர். பின்னர் அவர்கள் 3 குழுக்களாக பிரிந்து சேலம் அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி பகுதியில் சிலரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்த விசாரணையை முடித்து கொண்டு அவர்கள் ஓமலூர், தீவட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று சிலரிடம் விசாரணை நடத்தினர். என்.ஐ.ஏ. அதிகாரிகள், போலீசார் உதவியுடன் தங்கள் விசாரணையை ரகசியமாக நடத்தினர்.

சிம் கார்டு

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகள், பலரிடம் செல்போனில் பேசி உள்ளனர். அவர்கள் யார்? என பட்டியலிட்டு, அதில் சம்பந்தப்பட்டவர்களிடம் தற்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில் கொச்சியில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சேலம் வந்து விசாரணை நடத்தி உள்ளனர். இந்த குழுவினர் இன்றும் (திங்கட்கிழமை) விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

மேலும் கடலூரில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய ஒருவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அந்த நபர் சேலத்துக்கு வந்து சென்றுள்ளார். அவர் செல்போனில் பேசிய எண்கள் சில, சேலத்தை சேர்ந்தவர்கள் பெயரில் உள்ளது. அந்த பட்டியல் எடுக்கப்பட்டு, அவர்கள் அந்த நபருக்கு சிம் கார்டு கொடுத்து உதவி செய்தார்களா? அல்லது அந்த நபரே போலியான முகவரி கொடுத்து சிம் கார்டு பெற்றாரா?, வேறு வகையில் ஏதேனும் உதவி செய்யப்பட்டதா? என்ற கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story