நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 45,359 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுகின்றனர் - கலெக்டர் ஷில்பா தகவல்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 45 ஆயிரத்து 359 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதுகின்றனர் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கூறினார்.
நெல்லை,
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு நடத்துவது சம்பந்தமான ஒருங்கிணைப்பு கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் அதாவது நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நெல்லை, தென்காசி, சேரன்மாதேவி, வள்ளியூர், சங்கரன்கோவில் ஆகிய 5 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இங்கு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை மொத்தம் 45 ஆயிரத்து 359 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இதற்காக 173 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பாளையங்கோட்டை ஜெயிலில் உள்ள மையத்தில் 36 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.
பிளஸ்-1 தேர்வை 16 ஆயிரத்து 780 மாணவர்களும், 20 ஆயிரத்து 413 மாணவிகளும் என மொத்தம் 37 ஆயிரத்து 193 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இதில் 207 பேர் மாற்றுத்திறனாளிகள். பிளஸ்-2 தேர்வை 16 ஆயிரத்து 113 மாணவர்களும், 20 ஆயிரத்து 427 மாணவிகளும் என மொத்தம் 36 ஆயிரத்து 540 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இதில் 160 பேர் மாற்றுத்திறனாளிகள். இதற்காக 135 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
பிளஸ்-2 தேர்வு வருகிற மார்ச் 2-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி முடிவடைகிறது. பிளஸ்-1 தேர்வு வருகிற மார்ச் 4-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி முடிவடைகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் மாதம் 27-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 13-ந் தேதி முடிவடைகிறது. தேர்வு மையங்களில் மின்சாரம் தடை இல்லாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். தேர்வு முறைகேடுகளை தடுக்க கண்காணிப்பு குழுவும், பறக்கும் படையும் அமைக்கப்பட்டு உள்ளது. வினாத்தாள்கள் 10 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்படும். வினாத்தாள்கள் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் 31 வாகனங்களில் எடுத்து செல்லப்படும். இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story