உள்ளாட்சி வார்டுகள் மறுவரையறையில் குழப்பம் கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் புகார்
நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி வார்டு மறுவரையறையில் பெரும் குழப்பம் உள்ளதாக கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி வார்டு மறுவரையறையில் பெரும் குழப்பம் உள்ளதாக கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
கருத்து கேட்பு கூட்டம்
நெல்லை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்துகளின் வார்டுகளின் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்டு உள்ளன. இதற்கான அறிவிப்பு கடந்த வாரம் வெளியிடப்பட்டது. கடந்த 18–ந்தேதி முதல் இந்த வார்டு வரையறை குறித்த தகவல்கள் அனைத்து உள்ளாட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. இந்த உள்ளாட்சி வார்டு வரையறையில் ஏதேனும் குழப்பங்கள் இருந்தால் அதுகுறித்து நடத்தப்படும் கருத்து கேட்பு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கலாம் என்று கலெக்டர் ஷில்பா அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி வார்டு மறுவரையறை குறித்த கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பொதுமக்கள், அரசியல் கட்சியினர், மக்கள் பிரதிநிதிகள் கூறிய கருத்தை பதிவு செய்தார். இந்த கூட்டத்தில் முத்துக்கருப்பன் எம்.பி., முருகையாபாண்டியன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பலான மக்கள் வார்டு வரையறையில் பெரும் குழப்பம் உள்ளது. ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியை மற்ற சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியுடன் இணைத்து உள்ளனர். சம்மந்தம் இல்லாத மண்டலத்தில் சில வார்டுகளை சேர்த்து உள்ளனர் என்று புகார் தெரிவித்தனர்.
கண் துடைப்பு
கூட்டத்தில் மானூர் யூனியன் முன்னாள் தலைவர் கல்லூர் வேலாயுதம் பேசுகையில், ‘‘மேலநீலிதநல்லூர் யூனியனில் இருந்த வன்னிக்கோனேந்தல் பிர்காவை மானூர் யூனியனுடன் சேர்த்து உள்ளனர். இதனால் மக்களுக்கு சிரமம் ஏற்படும். மக்களின் வசதிக்காக தான் உள்ளாட்சிகள் பிரிக்கப்படவேண்டும். அவ்வாறு பிரிக்காமல் மானூர், குருவிகுளம், மேலநீலிதநல்லூர், பாப்பாக்குடி ஆகிய 4 யூனியன்களை பிளவுப்படுத்துவது மக்களுக்கு எந்த வகையிலும் பயன்படாது. உள்ளாட்சி மறுவரையறை பொதுமக்களின் வசதிக்காக பிரிக்கப்படவில்லை. பல்வேறு இடங்களில் மக்கள் வசிப்பிடங்களை கருத்தில் கொள்ளாமல் பிரித்து உள்ளனர். இப்படி மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் வார்டு வரையறை செய்து விட்டு கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துவதால் எந்த பலனும் பொதுமக்களுக்கு கிடையாது. இந்த கருத்து கேட்பு கூட்டம் கண்துடைப்பு போன்றது’’ என்றார்.
வார்டுகளை சரிசமமாக பிரிக்க வேண்டும்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீரான்மைதீன் பேசுகையில், ‘‘நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்தில் 14 வார்டுகள் இருந்தன. தற்போது ஒவ்வொரு வார்டுக்கும் 9 ஆயிரம் வாக்காளர்கள் என்ற நிலையை ஏற்படுத்தி வார்டுகளின் எண்ணிக்கையை குறைத்து உள்ளனர். மேலப்பாளையத்திற்கு அப்பால் உள்ள வார்டுகளில் ஒரு வார்டுக்கு 4 ஆயிரத்து 500 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். எனவே, வார்டுகளை சரிசமமாக பிரிக்கவேண்டும். வார்டுகளின் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது. அப்படி குறைத்தால் சுகாதார பணிகள், அடிப்படை வசதிகள் பாதிக்கப்படும்’’ என்றார்.
ம.தி.மு.க. அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் கல்லத்தியான் பேசுகையில், ‘‘பாளையங்கோட்டை மணடலத்தில் இருந்த திம்மராஜபுரம் பகுதி உள்ளடக்கிய 11–வது வார்டை தச்சநல்லூர் மண்டலத்துடன் இணைத்து உள்ளனர். இந்த பகுதி மக்கள் தங்களுடைய குறைகளை தெரிவிக்க 11 கிலோ மீட்டர் தூரம் செய்யவேண்டிய நிலை உள்ளது. எனவே, முன்புபோல் பாளையங்கோட்டை மண்டலத்திலேயே இருக்கவேண்டும்’’ என்றார்.
மேலப்பாளையம் மண்டலம்
பாரதீய ஜனதா மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ் பேசுகையில், ‘‘குலவணிகர்புரம் 28–வது வார்டு 43, 52, 31 என 3 வார்டுகளாக பிளவுபட்டுள்ளது. இதில் 31–வது வார்டை தச்சநல்லூர் மண்டலத்துடன் இணைத்து உள்ளனர். இந்த வார்டை ஏற்கனவே இருந்த மேலப்பாளையம் மண்டலத்துடன் இணைக்கவேண்டும்’’ என்றார்.
முன்னாள் கவுன்சிலர் சுடலைகண்ணு பேசுகையில், ‘‘நெல்லை மாநகராட்சி 50–வது வார்டு பல ஆண்டுகளாக பொது வார்டாக உள்ளது. இதை இன சுழற்சி முறையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கவேண்டும்’’ என்றார்.
லெப்பை குடியிருப்பைச் சேர்ந்த அருள்தாஸ் பேசுகையில், ‘‘வள்ளியூர் யூனியன் பெருங்குடி கிராமம் முன்பு காவல்கிணறு பஞ்சாயத்தில் இருந்தது. தற்போது வடக்கன்குளம் பஞ்சாயத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. முன்புபோல் காவல்கிணறு பஞ்சாயத்திலேயே தொடர்ந்து இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.
பரிசீலனை
இதைத்தொடர்ந்து பேசிய கலெக்டர் ஷில்பா, ‘‘பொதுமக்கள் கூறிய அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. உங்கள் கருத்துகளை பரிசீலனை செய்து முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், கிராம ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அருணாசலம், மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் வேலுமயில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story